Home இலங்கைச் செய்திகள்அதிக டெங்கு அபாயம் கொண்ட மாகாணம் – வெளியான அதிர்ச்சி தகவல்!

அதிக டெங்கு அபாயம் கொண்ட மாகாணம் – வெளியான அதிர்ச்சி தகவல்!

by Nabishad
0 comments

நாட்டின் அதிக டெங்கு அபாயம் கொண்ட மாகாணமாக, மேல் மாகாணம் மாறியுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது.

தற்போது நாடு முழுவதிலும் உள்ள 96 சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகள் டெங்கு அதிஅபாய வலயங்களாக அடையாளம் காணப்பட்டுள்ளன.

நாட்டில் இவ்வருடத்தில் இதுவரை பதிவாகியுள்ள மொத்த டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 92,011 ஆக உயர்ந்துள்ளதுடன் டெங்கு நோய் காரணமாக ஏற்பட்ட உயிரிழப்புகளின் எண்ணிக்கை 68 ஆக உயர்ந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை இவ்வருடத்தில் 29,968 என்ற அதிகளவிலான டெங்கு நோயாளர்கள் ஜூலை மாதத்திலேயே பதிவாகியுள்ளதாகவும் ஓகஸ்ட் மாதத்தின் முதல் 15 நாட்களில் மாத்திரம் 6,671 நோயாளர்கள் பதிவாகியுள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

banner

இதேவேளை, மொத்த டெங்கு நோயாளர்களில் 52.96 சதவீதமான (48,725) நோயாளர்கள் மேல் மாகாணத்தில் பதிவாகியுள்ளதுடன், நாட்டின் அதிக டெங்கு அபாயம் கொண்ட மாகாணமாக இது மாறியுள்ளது.

இரண்டாவதாக அதிகளவிலான நோயாளர்கள் தென் மாகாணத்தில் பதிவாகியுள்ளதுடன், அந்த எண்ணிக்கை 13,533 ஆகப் பதிவாகியுள்ளது.

இதற்கு மேலதிகமாக மத்திய மாகாணத்தில் 8,274 நோயாளர்களும், சப்ரகமுவ மாகாணத்தில் 7,558 நோயாளர்களும் பதிவாகியுள்ளனர்

மாவட்ட மட்டத்தில் பார்க்கும் போது, அதிகளவிலான நோயாளர்கள் கம்பஹா மாவட்டத்திலேயே பதிவாகியுள்ளதுடன், அந்த எண்ணிக்கை 19,631 ஆகும்.

கொழும்பு மாவட்டத்தில் 18,245 நோயாளர்களும், கண்டி மாவட்டத்தில் 6,613 நோயாளர்களும், மாத்தறையில் 6,036 நோயாளர்களும், களுத்துறையில் 5,951 நோயாளர்களும், காலியில் 5,039 நோயாளர்களும், இரத்தினபுரியில் 4,935 நோயாளர்களும் பதிவாகியுள்ளனர்.

டெங்கு நுளம்புகள் உருவாகும் இடங்களை அழித்துத் தங்கள் சூழலைத் தூய்மையாக வைக்குமாறும், காய்ச்சல் அறிகுறிகள் காணப்பட்டால் தாமதிக்காமல் வைத்தியரிடம் சிகிச்சை பெற்றுக்கொள்ளுமாறும் சுகாதாரப் பிரிவினர் பொதுமக்களிடம் கேட்டுக்கொள்கின்றனர்.

You may also like

Leave a Comment