Sri Lanka News

விரல் மை முறை நீக்கம்: அமைச்சரவை அனுமதி!

இலங்கையில் தேர்தல்களின் போது வாக்காளர்களின் விரல்களில் அடையாளமிடப்படும் ‘அழியாத பூச்சு’ முறையை முழுமையாக நீக்குவதற்கான சட்ட ரீதியான படிமுறைகளை மேற்கொள்வதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

அரசாங்கத்தினால் வெளியிடப்பட்டுள்ள உத்தியோகபூர்வ அமைச்சரவை தீர்மானங்களின்படி, ஜனாதிபதி சமர்ப்பித்துள்ள இந்த விசேட யோசனைக்கு அமைச்சரவை தனது உடன்பாட்டைத் தெரிவித்துள்ளது.

இலங்கையின் தேர்தல் சட்ட ஏற்பாடுகளின்படி, 2004 ஆம் ஆண்டு முதல் நடத்தப்பட்ட தேர்தல்களில் பின்வரும் இரண்டு நடைமுறைகளும் கட்டாயமாக்கப்பட்டிருந்தன.

வாக்களிக்க வரும் வாக்காளர்கள் தங்களது செல்லுபடியான அடையாள அட்டையை சமர்ப்பித்து ஆளடையாளத்தை உறுதிப்படுத்துதல்.

வாக்களித்த பின்னர் வாக்காளர்களின் விரலில் அழியாத பூச்சைப் (மை) பயன்படுத்தி அடையாளமிடுதல்.

வாக்காளர் ஒருவர் ஒரு தேர்தலில் ஒன்றுக்கு மேற்பட்ட தடவைகள் வாக்களிப்பதைத் (கள்ளவாக்கு) தடுப்பதே இந்த இரண்டு பணிகளினதும் ஒரே எதிர்பார்ப்பாகும்.

ஒரே நோக்கத்திற்காக ஒன்றுக்கொன்று வேறான இரண்டு முறைமைகளைக் கடைப்பிடிப்பதனால், வாக்கெடுப்பு நிலையங்களில் கடமைகளை வினைத்திறனாக மேற்கொள்வதற்குத் தடையாக உள்ளது என அவதானிக்கப்பட்டுள்ளது.

இந்த இரட்டை நடைமுறை காரணமாக அரசாங்கத்திற்கு வீணான மேலதிக செலவுகள் ஏற்படுவதும் கண்டறியப்பட்டுள்ளது.

எனவே, அடையாள அட்டை மூலம் ஆளடையாளம் கட்டாயமாக உறுதிப்படுத்தப்படுவதால், இனிவரும் காலங்களில் அழியாத பூச்சைப் பயன்படுத்தி வாக்காளர்களை அடையாளமிடும் சட்டரீதியான ஏற்பாடுகளை அனைத்து தேர்தல் சட்டங்களிலிருந்தும் நீக்குவது பொருத்தமானதென தீர்மானிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதியின் யோசனைக்கு அமைவாக, இதனுடன் தொடர்புடைய பின்வரும் தேர்தல் சட்ட ரீதியான ஏற்பாடுகளை நீக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது:

1981 ஆம் ஆண்டின் 15 ஆம் இலக்க ஜனாதிபதித் தேர்தல் சட்டத்தின் 36 ஆம் பிரிவு.

1981 ஆம் ஆண்டின் 01 ஆம் இலக்க பாராளுமன்ற தேர்தல் சட்டத்தின் 38 ஆம் பிரிவு.

1988 ஆம் ஆண்டின் 02 ஆம் இலக்க மாகாண சபைகள் தேர்தல் சட்டத்தின் 36 ஆம் பிரிவு.

உள்ளூராட்சி மன்றத் தேர்தல்: (262 ஆம் அத்தியாயமான) உள்ளுராட்சி அதிகாரசபை தேர்தல் கட்டளைச்சட்டத்தின் 53அ பிரிவு.

மக்கள் தீர்ப்பு: 1981 ஆம் ஆண்டின் 07 ஆம் இலக்க மக்கள் தீர்ப்பு சட்டத்தின் 21 ஆம் பிரிவு.

இதன்படி, இனிவரும் தேர்தல்களில் வாக்காளர்களின் விரலில் மை வைக்கும் பாரம்பரிய நடைமுறை இல்லாமல் போவதுடன், அடையாள அட்டையைச் சரிபார்க்கும் முறை மட்டுமே பிரதானமாகப் பயன்படுத்தப்படவுள்ளது.

Related Articles

Back to top button