Sri Lanka News

சிகரெட்டுகளுடன் சிக்கிய சீன வர்த்தகர்கள்: கட்டுநாயக்கவில் அதிரடி கைது!

1 கோடியே 8 இலட்சம் ரூபாய் பெறுமதியான வெளிநாட்டு தயாரிப்பு சிகரெட்டுகளை சட்டவிரோதமான முறையில் நாட்டிற்குள் கடத்தி வர முயன்ற நான்கு சீன விமான பயணிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கட்டுநாயக்க விமான நிலையத்தின் வருகை முனையத்தில் உள்ள “பசுமை வழி” ஊடாக இந்த சிகரெட் தொகையை வெளியே கடத்திச் செல்ல முயன்ற போதே, இன்று (01) அதிகாலை விமான நிலைய சுங்க அதிகாரிகள் மற்றும் சுங்க போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பிரிவின் அதிகாரிகளால் இவர்கள் நால்வரும் கைது செய்யப்பட்டனர்.

கைது செய்யப்பட்டவர்கள் 35 வயது மதிக்கத்தக்க சீன நாட்டு வர்த்தகர்கள் எனத் தெரியவந்துள்ளது.

அவர்கள் இன்று அதிகாலை 12.30 மணியளவில் தாய்லாந்தின் பேங்கொக் நகரிலிருந்து, தாய் ஏர்வேஸ் நிறுவனத்திற்குச் சொந்தமான TG – 307 என்ற விமானத்தின் மூலம் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர்.

இதன்போது, அவர்கள் கொண்டு வந்த 06 பயணப் பொதிகளுக்குள் சீனாவில் தயாரிக்கப்பட்ட 72,000 சிகரெட்டுகளை உள்ளடக்கிய 360 சிகரெட் கார்ட்டூன்கள் மறைத்து வைக்கப்பட்டிருந்தமை கண்டுபிடிக்கப்பட்டது.

கைது செய்யப்பட்ட சீன வர்த்தகர்களைக் கட்டுநாயக்க விமான நிலைய சுங்க அதிகாரிகள் தடுத்து வைத்து, இது குறித்தான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Articles

Back to top button