Sri Lanka News

மதிய உணவுத் திட்டத்தில் முறைகேடு: ஆசிரியர்களின் அலட்சியத்தால் மாணவர்கள் பாதிப்பு! பெற்றோர் குற்றச்சாட்டு

கந்தளாய் கல்வி வலயத்திற்குட்பட்ட பாடசாலை ஒன்றில் மாணவர்களுக்கு வழங்கப்படும் மதிய உணவுத் திட்டத்தில் பெருமளவிலான முறைகேடுகள் இடம்பெற்று வருவதாகவும், இதனைப் மேற்பார்வை செய்ய வேண்டிய ஆசிரியர்கள் அலட்சியப் போக்கோடு செயல்படுவதாகவும் பெற்றோர்கள் கடும் குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளனர்.

அரசாங்கத்தினால் மாணவர்களின் ஊட்டச்சத்து நிலையை மேம்படுத்துவதற்காகவும், பாடசாலைகளுக்கு மாணவர்களின் வருகையை உறுதி செய்வதற்காகவும் பெருமளவிலான நிதி ஒதுக்கப்பட்டு இந்த மதிய உணவுத் திட்டம் நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

ஆயினும், கந்தளாய் பகுதியிலுள்ள இப் பாடசாலையில் மாணவர்களுக்கு வழங்கப்படும் மதிய உணவு மிகவும் தரம் குறைந்ததாகவும், நிர்ணயிக்கப்பட்ட அளவை விடக் குறைவாகவும் வழங்கப்படுவதாகக் கூறப்படுகிறது.

சில தினங்களில் சமைக்கப்படும் உணவுகள் உண்ண முடியாத நிலையில் காணப்படுவதாகவும், ஊட்டச்சத்து விதிகளுக்குப் புறம்பான முறையில் மிகக் குறைந்த செலவில் உணவு தயாரிக்கப்பட்டு விநியோகிக்கப்படுவதாகவும் பெற்றோர் சுட்டிக்காட்டுகின்றனர்.

பாடசாலையில் விநியோகிக்கப்படும் உணவின் தரம், அளவு மற்றும் சுத்தத்தைப் பரிசோதித்து, அதனை உறுதிப்படுத்திய பின்னரே மாணவர்களுக்கு வழங்க வேண்டும் என்பது விதியாகும். இதற்கென பாடசாலை அதிபர் மற்றும் ஆசிரியர்கள் அடங்கிய குழுவினர் பொறுப்பாக இருக்க வேண்டும்.

ஆனால், இப் பாடசாலையின் பொறுப்பதிகாரிகளும் ஆசிரியர்களும் உணவின் தரம் குறித்து எவ்வித அக்கறையும் காட்டாமல், தங்களது கடமைகளில் தீவிர அலட்சியப் போக்கைக் கடைப்பிடித்து வருவதாகப் பெற்றோர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

எனவே, இந்த மதிய உணவு மோசடி மற்றும் அதிகாரிகளின் அலட்சியப் போக்கு குறித்து வலயக் கல்வி அதிகாரிகள் மற்றும் மாகாண கல்வித் திணைக்களம் உடனடியாகத் தலையிட்டு முறையான விசாரணைகளை நடத்த வேண்டும் எனவும், மாணவர்களுக்கு தரமான உணவு கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button