தொழிலாளர் உரிமைகள், சமூக பாதுகாப்பை மேம்படுத்த புதிய சர்வதேச ஒத்துழைப்பு

“சமூக நீதிக்கான உலகளாவிய ஒன்றியத்துடன்” இணைந்து செயலாற்றுதலுக்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
“சமூக நீதிக்கான உலகளாவிய ஒன்றியம்” (Global Coalition for Social Justice) அரச, தொழில் வழங்குநர் தொழிலாளர் அமைப்புக்கள், நிதி நிறுவனங்கள் மற்றும் அபிவிருத்தி வங்கிகள், அரச சார்பற்ற நிறுவனங்கள் மற்றும் கற்கைத் துறைகளுடன் சமூக நீதி மற்றும் ஆராக்கியமான வேலைச் சூழலை ஊக்குவிப்பதற்கான ஒத்துழைப்புடன் செயலாற்றுகின்ற சர்வதேச தொண்டர் நிறுவனமாகும்.
இந்நிறுவனம் சர்வதேச தொழிலாளர் அமைப்பின் தலைமைத்துவத்தில் இயங்குவதுடன், உலகளாவிய ரீதியில் நிலவுகின்ற சமூக நீதி தொடர்பாகவுள்ள சவால்களுக்கு துரிதமாகத் தீர்வுகளைப் பெற்றுக் கொள்ளக்கூடிய சமூகத்தளமாகவும் அமைகின்றது.
அதற்கமைய, விரிவான முறையிலும், நவீன உலகின் பொருளாதார மற்றும் சமூகப் போக்குகளைக் கருத்தில் கொண்டு, தொழில் வழங்குநர் – தொழிலாளர் பிரச்சினைகளுக்குத் தீர்வு வழங்குவதற்கும், ஊழியர்களைப் பாதுகாப்பதற்கான சேவைகளைப் பலப்படுத்தல், ஊழியப் படையில் பெண்களின் பங்கேற்பை அதிகரித்தல், முறைசாரா தொழிற் துறைகளிலுள்ள தொழிலாளர்களுடைய அபிவிருத்தியை உறுதிப்படுத்தல், பகுதி அரச மற்றும் தனியார் துறையிலுள்ள ஊழியர்களுக்கான விபத்துக் காப்புறுதி, மகப்பேற்று மற்றும் தொழில் காப்புறுதி போன்ற சமூகப் பாதுகாப்பு நடவடிக்கைகளைப் பலப்படுத்துவதற்கு இவ் உலகளாவிய ஒன்றியத்துடன் இணைந்து கொள்வதன் மூலம் நிறைவேற்றக் கொள்ளலாமென அடையாளங் காணப்பட்டுள்ளது.
அதற்கமைய, சமூக நீதிக்கான உலகளாவிய ஒன்றியத்துடன் பங்காளராக இலங்கை அரசு சார்பாக தொழில் அமைச்சு இணைந்து கொள்வதற்கும், குறித்த கூட்டணியின் இலங்கைக்கான ஒருங்கிணைப்பு நிலையமாக தொழில் விடயதான அமைச்சு நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கும் தொழில் அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.




