Sri Lanka News

தையிட்டியில் பதற்றம்: வேலன் சுவாமிகள் உள்ளிட்டோர் கைது

தையிட்டியில் பதற்றம்: வேலன் சுவாமிகள் உள்ளிட்டோர் கைது
தையிட்டி சட்டவிரோத விகாரைக்கு எதிராக இன்று (21) முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தில் பெருமளவான பொலிஸார் குவிக்கப்பட்டதால் அப்பகுதியில் பதற்றமான சூழல் நிலவியது. இதனையடுத்து வேலன் சுவாமிகள் உள்ளிட்ட மதத் தலைவர்கள் மற்றும் அரசியல் பிரமுகர்களை பலாலி பொலிஸார் கைது செய்துள்ளனர்.

தையிட்டி ‘திஸ்ஸ’ விகாரைக்காகச் சட்டவிரோதமாகக் கையகப்படுத்தப்பட்டுள்ள தனியார் காணிகளை விடுவிக்குமாறும், விகாரையின் விகாராதிபதிக்கு வழங்கப்படும் பதவி உயர்வுக்கு எதிர்ப்புத் தெரிவித்தும் விகாரைக்கு முன்பாக இன்று இப்போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

குறித்த போராட்டத்திற்கு எதிராக பொலிஸார் நீதிமன்றத் தடையுத்தரவைப் பெற்றுள்ளதுடன், பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அரசியல்வாதிகள் உள்ளிட்ட 29 பேர் போராட்டத்தில் கலந்துகொள்ளக்கூடாதெனப் பெயர் குறிப்பிட்டுத் தடையுத்தரவு பெறப்பட்டிருந்தது.

இந்நிலையில், இன்று போராட்டம் முன்னெடுக்கப்பட்ட வேளையில், விகாரையை அண்மித்த சூழலில் கலகம் அடக்கும் பொலிஸார் உட்படப் பெருமளவான பொலிஸார் குவிக்கப்பட்டனர். இதனால் போராட்டக்காரர்களுக்கும் பொலிஸாருக்கும் இடையில் முரண்பாடு ஏற்பட்டு, அப்பகுதியில் அமைதியின்மை ஏற்பட்டது.

“இது ஓர் அமைதிவழியான போராட்டம். இங்கு எந்த விதத்திலும் பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கப்படவில்லை. விகாரைக்குள் போராட்டக்காரர்கள் செல்லவோ, விகாரைக்குச் சேதம் விளைவிக்கவோ இல்லை. அவ்வாறிருக்கையில், விகாரைக்குச் செல்லும் வீதியை நீங்கள் எவ்வாறு அடாத்தாக மறித்து வைத்திருக்க முடியும்?” எனப் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் பொலிஸாருடன் தர்க்கத்தில் ஈடுபட்டனர்.

இதனைத் தொடர்ந்து, போராட்டத்தில் ஈடுபட்டிருந்த வலி. கிழக்கு பிரதேச சபையின் தவிசாளர் தியாகராசா நிரோஷ், சிவகுரு ஆதீன முதல்வர் வேலன் சுவாமிகள் மற்றும் வலி. வடக்கு பிரதேச சபையின் உறுப்பினர்கள் உள்ளிட்ட 5 பேர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர்.

கைது நடவடிக்கையினால் போராட்டக்களத்தில் அமைதியின்மை ஏற்பட்டுள்ள போதிலும், போராட்டம் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button