புதிய சாதனை படைத்த ஜோ ரூட்

இங்கிலாந்து – இலங்கை அணிகள் இடையிலான 3 ஆவது மற்றும் கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டி கொழும்பில் நேற்று (28) நடைபெற்றது.
இதில் முதலில் துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி 50 ஓவர்களில் 3 விக்கெட்டுக்கு 357 ஓட்டங்களை குவித்தது. ஜோ ரூட் 111 ஓட்டங்களுடனும், அணி தலைவர் ஹாரி புரூக் 136 ஓட்டங்களுடனும் ஆட்டமிழக்கமால் இருந்தனர்.
இதனையடுத்து 358 ஓட்டங்கள் எடுத்தால் என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 46.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளை இழந்து 304 ஓட்டங்களை மாத்திரமே பெற்றது. இலங்கை அணி சார்பில் அதிகபட்சமாக பவன் ரத்நாயக்க 121 ஓட்டங்களை பெற்றுக்கொண்டார்.
இதனையடுத்து இங்கிலாந்து அணி 53 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஜோ ரூட் தொடர்நாயகன் விருது வென்றார்.
ஜோ ரூட் 60 ஓட்டங்களை எட்டிய போது சர்வதேச கிரிக்கெட்டில் (டெஸ்ட், ஒருநாள், 20 ஓவர் போட்டி சேர்த்து) அதிக ஓட்டங்கள் எடுத்தவர்கள் பட்டியலில் 8 ஆவது இடத்தில் இருந்த மேற்கிந்திய தீவுகள் அணியின் ஜாம்பவான் லாராவை (22,358 ஓட்டங்கள்) பின்னுக்கு தள்ளி அந்த இடத்தை தனதாக்கினார். ஜோ ரூட் 22,413 ஓட்டங்களுடன் 8 ஆவது இடத்தில் உள்ளார்.



