மதுரையில் ரூ.325 கோடியில் சர்வதேச தரத்திலான புதிய கிரிக்கெட் ஸ்டேடியம் – இன்று திறந்து வைக்கிறார் தோனி!

சென்னை சேப்பாக்கிற்கு அடுத்தபடியாக தமிழ்நாட்டில் மிகப்பெரிய கிரிக்கெட் ஸ்டேடியமாக கருதப்படும் மதுரையில் புதிதாக கட்டப்பட்டுள்ள ஸ்டேடியத்தை இன்று இந்திய முன்னாள் கிரிக்கெட் கேப்டன் மஹேந்திர சிங் தோனி திறந்து வைக்கிறார்.
தமிழகத்தின் விளையாட்டு வரலாற்றில் புதிய ஒளியைப் பரப்பும் வகையில், சென்னை சேப்பாக்கிற்கு அடுத்தபடியாக மாநிலத்தின் 2-வது மிகப்பெரிய கிரிக்கெட் ஸ்டேடியம் மதுரையில் உருவாக்கப்பட்டுள்ளது. வேலம்மாள் கல்வி குழுமம் சார்பில், தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தின் (TNCA) ஆதரவுடன், மதுரை சிந்தாமணி ரிங் ரோடு பகுதியில் உள்ள வேலம்மாள் ஆஸ்பத்திரி அருகே 11.5 ஏக்கர் நிலப்பரப்பில் இந்த பிரமாண்ட ஸ்டேடியம் கட்டப்பட்டுள்ளது.
சர்வதேச தரத்தில் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த ஸ்டேடியம் ரூ.325 கோடி மதிப்பீட்டில் உருவாக்கப்பட்டுள்ளது. வீரர்களுக்கான பயிற்சி மைதானங்கள், ஓய்வறைகள், உடற்பயிற்சி கூடம், ஆம்புலன்ஸ் மற்றும் மருத்துவமனை, விரிவான கார் பார்க்கிங் உள்ளிட்ட அனைத்து வசதிகளும் இங்கு ஏற்படுத்தப்பட்டுள்ளன. மேலும், மழை பெய்தால்கூட ஆட்டம் பாதிக்கப்படாமல் இருக்க சிறப்பான வடிகால் அமைப்பும் செய்யப்பட்டுள்ளதை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மைதானத்தின் மின்கோபுரம் அமைப்புக்காக ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து உள்ளிட்ட கிரிக்கெட் மைதான வல்லுநர்களுடன் ஆலோசிக்கப்பட்டுள்ளது. முதற்கட்டமாக 7,300 பேர் அமரும் வசதியுடன் கேலரி கட்டப்பட்டுள்ளது. முழுமையான திட்டம் நிறைவேறியதும் 20,000 ரசிகர்கள் ஒரே நேரத்தில் போட்டியை காணும் வசதி அமையும். மேலும், மைதானம் மற்றும் அதன் சுற்றுப்பகுதிகளை கண்காணிக்க 197 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.
சென்னை சேப்பாக்கிற்கு அடுத்து தமிழ்நாட்டில் இதுவே மிகப்பெரிய கிரிக்கெட் ஸ்டேடியமாக கருதப்படுகிறது. இன்று இந்த ஸ்டேடியத்தை இந்திய முன்னாள் கிரிக்கெட் கேப்டன் மஹேந்திர சிங் தோனி திறந்து வைக்கிறார். திறப்பு விழாவில் பல்வேறு விளையாட்டு வீரர்கள், அரசியல் மற்றும் கல்வித் துறை பிரமுகர்கள் பங்கேற்க உள்ளனர்.
இது முழுமையாக செயல்படத் தொடங்கியதும் டி.என்.பி.எல்., ஐ.பி.எல்., ரஞ்சி மற்றும் சர்வதேச அளவிலான கிரிக்கெட் போட்டிகள் இங்கு நடத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. மதுரையில் உருவாகியுள்ள இந்த புதிய ஸ்டேடியம் தென்னிந்தியாவின் கிரிக்கெட் வளர்ச்சிக்குப் பெரும் ஊக்கமாக அமைந்துள்ளது.



