சங்கா மற்றும் சச்சினின் சாதனையை தகர்த்த விராட் கோலி

சங்கா மற்றும் சச்சினின் சாதனையை தகர்த்த விராட் கோலி
சர்வதேச கிரிக்கெட் வரலாற்றில் அதிக ஓட்டங்களைக் குவித்தவர்களின் பட்டியலில், இந்தியத் துடுப்பாட்ட நட்சத்திரம் விராட் கோலி இரண்டாம் இடத்தைப் பிடித்து இன்று (11) புதிய சாதனையைப் பதிவு செய்துள்ளார்.
நியூசிலாந்து அணிக்கு எதிராக இன்று இடம்பெறும் முதலாவது ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டியின் போது, இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் அணித் தலைவர் குமார் சங்கக்காரவின் சாதனையை முறியடித்து கோலி இந்த வரலாற்று மைல்கல்லை எட்டியுள்ளார்.
இப்போட்டி தொடங்குவதற்கு முன்னதாக, குமார் சங்கக்காரவின் 28,016 சர்வதேச ஓட்டங்கள் என்ற சாதனையை முறியடிப்பதற்கு கோலிக்கு 42 ஓட்டங்களே தேவைப்பட்டன.
இந்நிலையில், நியூசிலாந்து அணியின் வெற்றியிலக்கை நோக்கி துடுப்பாடும் போது, 19-வது ஓவரில் கோலி இந்தச் சாதனையைத் தன்வசப்படுத்தினார்.
சர்வதேச கிரிக்கெட் வரலாற்றில் 28,000 ஓட்டங்களைப் பெற்ற 3 வது வீரராக விராட் கோலி பதிவானதுடன், அதிக ஓட்டங்கள் குவித்தவர்கள் பட்டியலில் தற்போது சச்சின் டெண்டுல்கர் மாத்திரமே கோலிக்கு முன்னால் (முதலிடத்தில்) உள்ளார்.
அத்துடன் குறைந்த இன்னிங்ஸில் 28,000 ஓட்டங்களைப் பெற்ற முதல் வீரர் என்ற சாதனையையும் விராட் கோலி நிகழ்த்தியுள்ளார்.
சச்சின் டெண்டுல்கர் 644 இன்னிங்ஸில் 28000 ஓட்டங்களைப் பெற்றுள்ளார்.
விராட் கோலி 624 இன்னிங்ஸில் 28000 ஓட்டங்களைப் பெற்றுள்ளார்.
குமார் சங்கக்கார 666 இன்னிங்ஸில் 28000 ஓட்டங்களைப் பெற்றுள்ளார்.



