அமெரிக்க ஓபன்; போராட்டத்துக்கு மத்தியில் ஜோகோவிச் 4ஆவது சுற்றுக்கு முன்னேற்றம்!

24 முறை கிராண்ட்ஸ்லாம் சாம்பியனான நோவக் ஜோகோவிச் காயத்தின் மத்தியிலும் போராடி அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியில் நான்காவது சுற்றுக்கு முன்னேறியுள்ளார்.
நியூயோர்க்கில் வெள்ளிக்கிழமை (29) மாலை நடைபெற்ற போட்டியில் இங்கிலாந்து வீரர் கேமரூன் நோரியை 6-4, 6-7, 6-2, 6-3 என்ற கணக்கில் தோற்கடித்து நோவக் ஜோகோவிச் அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.
தனது 25 ஆவது பெரிய பட்டத்தை வெல்லும் முயற்சியில் ஈடுபட்டுள்ள 38 வயதான செர்பிய வீரர், தொடக்க செட்டில் முதுகு பகுதியில் ஏற்பட்ட காயத்தால் அவதிப்பட்டார். இதனால் அவருக்கு மருத்துவ உதவி வழங்கப்பட்டது.
மேலும் நான்கு முறை அமெரிக்க ஓபன் சாம்பியனான ஜோகோவிச் இரண்டாவது செட்டின் ஆரம்பத்திலும் மேலதிக சிகிச்சையை கோரியிருந்தார்.
ஜூலை மாதம் விம்பிள்டன் அரையிறுதியில் தோல்வியடைந்த பின்னர், இது அவர் பங்கெடுத்த முதல் போட்டியாகும்.
அதேநேரம், 1991 ஆம் ஆண்டு 38 வயதான ஜிம்மி கானர்ஸுக்குப் பின்னர், அமெரிக்க ஓபன் நான்காவது சுற்றை எட்டிய அதிகம் வயதான வீரர் என்ற பெருமையை ஜோகோவிச் பெற்றார்.
இதேவேளை மகளிர் தரப்பில், தொடர்ந்து ஐந்தாவது ஆண்டாக அமெரிக்க ஓபனின் நான்காவது சுற்றுக்கு முதல் நிலை வீராங்கனையான அரினா சபலென்கா முன்னேறினார்.
வெள்ளிக்கிழமை நடைபெற்ற போட்டியில் லேலா பெர்னாண்டஸை 6-3, 7-6(2) என்ற செட் கணக்கில் தோற்கடித்து பெலருஷ்யன் வீராங்கனை தோற்கடித்ததுடன், 2021 அரையிறுதியில் பெர்னாண்டஸிடம் ஏற்பட்ட தோல்விக்கும் பழிவாங்கினார்