கல்பனா ரி10 வார் கிரிக்கட் கிண்ணத்தை மருதமுனை கல்பனா விளையாட்டுக் கழகம் கைப்பற்றிக் கொண்டது

மருதமுனை கல்பனா விளையாட்டுக் கழகத்தின் 36 வது வருட நிறைவை முன்னிட்டு நடாத்தப்பட்ட அணிக்கு 11 பேர் 10 ஓவர்கள் கொண்ட 24 அணிகளை உள்ளடக்கியதாக நடைபெற்ற கிரிக்கட் சுற்றுப் போட்டித் தொடரின் இறுதிப் போட்டியும் பரிசளிப்பு விழாவும் 2025.07.25 வெள்ளியன்று மருதமுனை மசூர் மெளலானா விளையாட்டு மைதானத்தில் கல்பனா விளையாட்டுக் கழகத்தின் தலைவர் ஐ.எல்.எம் றிபாஸ் தலைமையில் கோலாகலமாக நடைபெற்றது.
கல்பனா ரி10 வார் இறுதிப் போட்டியில் மருதமுனை கல்பனா விளையாட்டுக் கழகத்தினை எதிர்த்து மருதமுனை பென்சின் விளையாட்டுக் கழகம் மோதியிருந்தது.
நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற கல்பனா அணித் தலைவர் களத்தடுப்பை தெரிவு செய்தார்.முதல் இனிங்சிற்காக துடுப்பெடுத்தாடிய பென்சின் அணியினர் நிர்ணயிக்கப்பட்ட 10 ஓவர்களில் 08 விக்கட்டுக்களை இழந்து 50 ஓட்டத்தை பெற்றுக் கொண்டது.பென்சின் அணி சார்பாக அதிகபட்சமாக அதீப் அஹமட் 19 ஓட்டங்களையும் கல்பனா அணி சார்பாக அன்பஸ் அமான் 02 விக்கட்டையும் கைப்பற்றினார்.
பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய கல்பனா அணியினர் 7.5 பந்து வீச்சு ஓவர் நிறைவில் 02 விக்கட்டுக்களை மாத்திரம் பறி கொடுத்து 51 ஓட்டங்களை பெற்று வெற்றியிலக்கை அடைந்தது.அதிக பட்சமாக முனீஸ் 18 ஓட்டங்களை பெற்றுக் கொண்டார்.இதன் மூலம் இறுதிப் போட்டியில் கல்பனா அணியினர் 08 விக்கட்டுக்களால் வெற்றி பெற்று சம்பியன் கிண்ணத்தையும் 35000/= பணப் பரிசையும் தனதாக்கி கொண்டது.பென்சின் அணியினர் இரண்டாம் இடத்தினை பெற்று கிண்ணத்தையும் 20000/= ரூபாவையும் பெற்றுக் கொண்டார்கள்.
மேற்படி இறுதிப் போட்டிக்கு பிரதம அதிதியாக பர்வின் றேடிங்,லதான் மற்றும் சொய்ல் ஸ்டார் நிறுவனங்களின் நிறைவேற்றுப் பணிப்பாளரும்,அகில இலங்கை மக்கள் காங்ரஸ் கட்சியின் அம்பாறை மாவட்ட பொருளாளரும்,மருதமுனை கோல்ட்மைன்ட் விளையாட்டுக் கழகத்தின் தலைவருமான அல்ஹாஜ் கலீல் முஸ்தபா அவர்கள் கலந்து சிறப்பித்தார்கள்.
இறுதி நாள் நிகழ்விற்கு கெளரவ அதிதிகளாக அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையின் வைத்தியர் ஏ.எம் ஏ அஸீம்,அனா ஹேன்ட் லூம் நிறுவனத்தின் நிறைவேற்று பணிப்பாளர் ஏ.ஆர்.எம் தெளபீக்,முஹம்மட் மென்ஸ் வெயார் நிறுவனத்தின் நிறைவேற்று பணிப்பாளர் ஏ.எச்.எம் தஸ்மீம் ஆகியோர் கலந்து சிறப்பித்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
