இலங்கை வரலாற்றில் முதல் சந்தர்ப்பம்!

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று (22) குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் (CID) கைது செய்யப்பட்டார்.
இது இலங்கையில் முன்னாள் அரச தலைவர் ஒருவர் கைது செய்யப்பட்ட முதல் சந்தர்ப்பமாகும்.
இன்று காலை குற்றப் புலனாய்வுப் பிரிவில் முன்னிலையாகி வாக்குமூலம் பதிவு செய்த பின்னர் அவர் கைது செய்யப்பட்டார்.
விரைவில் அவரை நீதிமன்றில் முன்னிலைப்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
லண்டனுக்கு மேற்கொண்ட வெளிநாட்டுப் பயணம் தொடர்பான விசாரணைக்காக அவர் சிஐடிக்கு அழைக்கப்பட்டார்.
இந்தப் பயணத்தில் தனியார் நிகழ்வுகள் இடம்பெற்றதாகவும், ஆனால் அரசு நிதியில் இருந்து நிதியளிக்கப்பட்டதாகவும் புலனாய்வாளர்கள் கூறுகின்றனர்.
ரணில் விக்கிரமசிங்க தனது ஜனாதிபதி காலத்தில் நியூயோர்க்கிற்கும் பின்னர் இங்கிலாந்துக்கும் விஜயம் செய்ததாகவும், அங்கு லண்டனில் நடந்த பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் கலந்து கொண்டதாகவும் கூறப்படுகிறது.
சிஐடியின் தகவலின்படி, லண்டன் பயணப் பகுதி அரசாங்கத்திற்கு சுமார் ரூ. 16.9 மில்லியன் செலவாகியுள்ளது.
இந்த மாத தொடக்கத்தில், விசாரணையின் ஒரு பகுதியாக, முன்னாள் ஜனாதிபதி செயலாளர் சமன் ஏகநாயக்க மற்றும் முன்னாள் தனியார் செயலாளர் சாண்ட்ரா பெரேரா ஆகியோரை புலனாய்வாளர்கள் விசாரித்தமையும் குறிப்பிடத்தக்கது.