புதுடெல்லியில் பொதுநலவாய மாநாட்டில் இலங்கை சபாநாயகர் தலைமையிலான தூதுக் குழு பங்கேற்பு!

இந்தியப் பிரதமரின் தலைமையில் ஆரம்பமான பொதுநலவாய சபாநாயகர்கள் மற்றும் தலைமை தாங்கும் அதிகாரிகளின் மாநாட்டில் சபாநாயகர் (வைத்தியர்) ஜகத் விக்கிரமரத்ன உள்ளிட்ட இலங்கை பாராளுமன்ற தூதுக் குழுவினரும் இணைந்துகொண்டனர்.பொதுநலவாய சபாநாயகர்கள் மற்றும் தலைமை தாங்கும் அதிகாரிகளின் 28வது மாநாடு (CSPOC) இந்தியாவின் பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடியின் தலைமையில் 2026.01.15 ஆம் திகதி புதுடில்லியில் உள்ள பாராளுமன்ற கட்டடத் தொகுதியில் சம்விதான் சதன் மண்டபத்தில் ஆரம்பமானது. இம்மாநாட்டின் அங்குரார்ப்பண நிகழ்வில் அனைத்துப் பாராளுமன்றங்களின் ஒன்றியத்தின் (IPU) தலைவர் (கலாநிதி) டுலியா அக்சன் மற்றும் பொதுநலவாய பாராளுமன்ற ஒன்றியத்தின் (CPA) தலைவர் (கலாநிதி) கிரிஸ்தோப்பர் கலிலா உள்ளிட்ட பொதுநலவாய நாடுகளின் சபாநாயகர்கள் மற்றும் தலைமைதாங்கும் அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டனர். பொதுநலவாய பாராளுமன்றத்தின் ஒத்துழைப்பின் முக்கியத்துவத்தை வலியுறுத்தி பொதுநலவாய சபாநாயகர்கள் மற்றும் தலைமைதாங்கும் அதிகாரிகளின் சங்கதத்தின் நிலைக்குழுவினால் சகல விருந்தினர்களும் அன்புடன் வரவேற்கப்பட்டனர்.இந்த மாநாட்டில் கலந்துகொண்ட இலங்கைத் தூதுக் குழுவில் சபாநாயகர் (வைத்தியர்) ஜகத் விக்கிரமரத்ன, பாராளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர, இலங்கை பாராளுமன்றத்தின் நிர்வாக உதவிப் பணிப்பாளர் காஞ்சன ருசித ஹேரத் ஆகியோர் உள்ளடங்குகின்றனர்.இம்மாநாட்டில் சபாநாயகர் (வைத்தியர்) ஜகத் விக்கிரமரத்ன, சட்டமன்றங்கள் எதிர்கொள்ளும் சமகால சவால்களை நிவர்த்தி செய்யும் உயர் மட்ட கலந்துரையாடல்களில் பங்குபற்றினார். குறிப்பாக, “சமூக ஊடகங்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் மீதான அவற்றின் தாக்கம்” என்ற தலைப்பில் உரையாற்றியிருந்தார். டிஜிட்டல் துறையின் செல்வாக்கை நிர்வகித்தல், நிறுவன ஒருமைப்பாட்டைப் பாதுகாத்தல் மற்றும் பொறுப்பான பொது உரையாடலுடன் கருத்து சுதந்திரத்தை சமநிலைப்படுத்துதல் குறித்த விடயத்தில் இங்கைப் பாராளுமன்றத்தின் அனுபவங்களை அவர் இதன்போது பகிர்ந்துகொண்டார்.இலங்கைப் பாராளுமன்றத்தின் கௌரவ சபாநாயகர் (வைத்தியர்) ஜகத் விக்கிரமரத்ன, இந்திய மக்களவையின் சபாநாயகர் ஸ்ரீ ஓம் பிர்லாவுடன் சந்திப்பொன்றை நடத்தியதுடன், பொதுவான ஜனநாயக மரபுகள் மற்றும் இலங்கை-இந்திய உறவை மீண்டும் உறுதிப்படுத்தினார். நிறுவனங்களுக்கிடையிலான பரிமாற்றங்கள், நட்புக் குழுக்கள், சட்டமன்ற ஒத்துழைப்பு, செயற்கை நுண்ணறிவு, நிகழ்நேர பன்மொழி மொழிபெயர்ப்பு, ஜனநாயகங்களுக்கான பாராளுமன்ற ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் (PRIDE) போன்ற திறன் மேம்பாட்டுத் திட்டங்கள் மற்றும் புத்த கயா போன்ற கலாச்சார உறவுகள் உட்பட புதிய தொழில்நுட்பங்களுடன் பாராளுமன்றப் பணிகளை நவீனமயமாக்குதல் உள்ளிட்ட இரு நாடுகளின் பாராளுமன்றங்களுக்கு இடையிலான தொடர்ச்சியான ஒத்துழைப்பு குறித்து இதில் கலந்துரையாடப்பட்டது.இந்த மாநாட்டின்போது சபாநாயகர் (வைத்தியர்) ஜகத் விக்கிரமரத்ன, ஐக்கிய இராச்சிய பாராளுமன்றத்தின் சபாநாயகர் சேர் லிண்ட்சே ஹோய்ல், கனடா பாராளுமன்றத்தின் சபாநாயகர் பிரான்சிஸ் ஸ்கார்பாக்லியா மற்றும் அவுஸ்திரேலியாவின் பிரதிநிதிகள் சபையின் சபாநாயகர் மில்டன் டிக் உள்ளிட்ட சபாநாயகர்ளுடன் இருதரப்புக் கலந்துரையாடல்களை நடத்தினார். இந்தச் சந்திப்புக்கள் பாராளுமன்றங்களின் சிறந்த நடைமுறைகள், நிறுவன சீர்திருத்தம் மற்றும் ஜனநாயக நிர்வாகம் குறித்த விடயங்களைப் பரிமாறிக்கொள்ள உதவியாக இருந்தன.வலுவான ஜனநாயக நிறுவனங்களைப் பராமரிப்பதில் சபாநாயகர்கள் மற்றும் தலைமை தாங்கும் அதிகாரிகளின் பங்கை மையமாகக் கொண்ட முழுமையான அமர்வுடன் பொதுநலவாய சபாநாயகர்கள் மற்றும் தலைமை தாங்கும் அதிகாரிகளின் 28வது மாநாடு 2026 ஜனவரி 16 முடிவடைந்தது. இதில் பொதுநலவாய சபாநாயகர்கள் மற்றும் தலைமை தாங்கும் அதிகாரிகளின் மாநாட்டின் தலைமைப் பதவியும் முறையாக ஒப்படைக்கப்பட்டது.மாநாட்டின் முடிவுக்குப் பின்னர் பங்கேற்ற பிரதிநிதிகள் ஜெய்ப்பூர் நகரைச் சுற்றிப் பார்த்தனர், இதன்போது இந்தியாவின் வரலாற்று பாரம்பரியம் மற்றும் கலாச்சார மரபுகளை அனுபவிக்கும் வாய்ப்பு அவர்களுக்குக் கிடைத்தது.




