நெடுந்தீவு–கச்சதீவை இணைக்கும் சுற்றுலா திட்டம் குறித்து ஆய்வு

நெடுந்தீவு மற்றும் கச்சதீவை ஒன்றிணைக்கும் வகையிலான சுற்றுலா மேம்பாட்டுத் திட்டத்தின் சாத்தியப்பாடுகள் தொடர்பில் ஆராயப்படுகின்றது என்று கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்தார்.
ஜனாதிபதியுடன் இணைந்து நேற்று (02) கச்சதீவுக்கு கண்காணிப்பு பயணம் மேற்கொண்டமை தொடர்பில் கருத்து வெளியிடுகையிலேயே அமைச்சர் இவ்வாறு கூறினார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
‘கச்சதீவு பகுதியில் மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபடும் எமது மீனவ சொந்தங்களின் பாதுகாப்பு, அவர்கள் எதிர்நோக்கும் சவால்கள் மற்றும் அப்பகுதியில் மேற்கொள்ள வேண்டிய மேம்பாட்டு திட்டங்கள் பற்றி கடற்படையினரிடம் கேட்டறிந்தோம். அதேபோல சுற்றுலாத்துறையை மேம்படுத்துவதற்குரிய பல்வேறு திட்டங்கள் வகுக்கப்பட்டு வருகின்றன.
அந்தவகையில் நெடுந்தீவு மற்றும் கச்சதீவை ஒன்றிணைத்த வகையில் சுற்றுலா திட்டமொன்றை மேற்கொள்வதற்குரிய சாத்தியப்பாடு பற்றியும் கேட்டறியப்பட்டது. நெடுந்தீவுக்கு தற்போது சுற்றுலாப் பயணிகள் வரும் நிலையில் அதனை கச்சதீவுவரை மேம்படுத்துவதற்குரிய திட்டம் உள்ளது.” என குறிப்பிட்டுள்ளார்