News

UN மனித உரிமைகள் உயர்ஸ்தானிகரை சந்தித்த பிரதமர்

UN மனித உரிமைகள் உயர்ஸ்தானிகரை சந்தித்த பிரதமர்
ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் வோக்கர் டர்க் (Volker Türk) மற்றும் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய ஆகியோருக்கு இடையிலான சந்திப்பு ஜூன் 23 ஆம் திகதி பிரதமர் அலுவலகத்தில் இடம்பெற்றது.

ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகரை வரவேற்ற பிரதமர், மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் அலுவலகத்துடன் (OHCHR) பயனுள்ள விதத்திலும் ஒத்துழைப்புடனும் செயற்படுவதற்கான அரசாங்கத்தின் அர்ப்பணிப்பை வெளிப்படுத்தினார். சமீபத்தில் இலங்கை அரசியல் ஏற்பட்ட மாற்றம் குறித்து குறிப்பிட்ட அவர், அனைத்து சமூகங்களிடமிருந்தும் கிடைக்கப்பெற்ற வரலாற்று முக்கியத்துவம் மிக்க மக்கள் ஆணையானது இலங்கையின் அரசியல் கலாச்சாரத்தில் குறிப்பிடத்தக்க மாற்றத்தை பிரதிபலிக்கிறது என்றும் குறிப்பிட்டார்.

கிராமப்புற வறுமையை ஒழித்தல், டிஜிட்டல் மயமாக்கலை முன்னெடுத்தல் மற்றும் தேவையான சமூக மாற்றத்தைப் போன்றே நிறுவன ரீதியிலான மாற்றங்களுடன் சட்ட மற்றும் அரசியல் சீர்திருத்தங்களை பின்பற்றுதல்.ஆகிய மூன்று முக்கிய காரணிகளில் அரசாங்கத்தின் கவனம் செலுத்தப்பட்டுள்ளது என்பதை பிரதமர் சுட்டிக்காட்டினார். சமூக, கல்வி, சுகாதார மற்றும் பொருளாதார உரிமைகள் உள்ளிட்ட மனித உரிமைகளின் முழுமையான கட்டமைப்பை பாதுகாத்து மேம்படுத்துவதற்கு அரசாங்கம் அர்ப்பணிப்புடன் செயல்பட்டு வருகின்றது என்றும் பிரதமர் தெரிவித்தார். காணாமல் போனோர் பற்றிய அலுவலகம், இழப்பீட்டுக்கான அலுவலகம்(OR) மற்றும் தேசிய ஒற்றுமை மற்றும் நல்லிணக்கத்திற்கான அலுவலகம் (ONUR) போன்ற உள்நாட்டு இயங்குதளங்களை வலுப்படுத்துவதன் மூலம் இந்த செயல்முறைக்கு ஆதரவளிக்கப்படும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

இதன் போது மனித உரிமைகளை பாதுகாப்பதற்கான இலங்கையின் தொடர்ச்சியான தலையீட்டை பாராட்டிய உயர்ஸ்தானிகர், மனித உரிமைகள், ஜனநாயக ஆட்சி மற்றும் தேசிய நல்லிணக்கத்தை முன்னெடுப்பதில் இருதரப்பு ஒத்துழைப்பின் முக்கியத்துவம் குறித்து விசேடமாகக் குறிப்பிட்டார்.

இந்த சந்திப்பில் இலங்கைக்கான ஐக்கிய நாடுகளின் நிரந்தர ஒருங்கிணைப்பாளர் Marc-André Franche, ஐக்கிய நாடுகள் அமைப்பை பிரதிநிதித்துவப்படுத்தும் அதிகாரிகள். இலங்கை தூதுக்குழுவின் சார்பாக பிரதமரின் செயலாளர் பிரதீப் சபுதந்திரி, வெளிநாட்டு விவகாரங்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சின் செயலாளர் அருணி ரணராஜா, பிரதமர் அலுவலகத்தினதும் வெளிநாட்டு விவகாரங்கள் பிரிவினதும் சிரேஷ்ட அதிகாரிகள் சிலரும் பங்கேற்றனர்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button