வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட, வெளிநாட்டில் பணிபுரிகின்ற இலங்கையரின் பிள்ளைகளின் கல்வியை மேம்படுத்துவதற்கான சிறப்பு வேலைத்திட்டத்தின் கீழ் பாடசாலை உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு பதுளை, ஹாலி-எல பகுதியில் சிறப்பாக நடைபெற்றது.
வெளிநாடுகளில் பணிபுரியும் தொழிலாளர்களின் பிள்ளைகளுக்குப் புத்தகங்கள் மற்றும் பாடசாலை உபகரணங்களை வழங்குவதோடு, அந்தப் பிள்ளைகளைப் பராமரித்து வரும் பாதுகாவலர்களுக்கு அவர்களின் பாதுகாப்பு மற்றும் நலன் தொடர்பாக தெளிவூட்டும் விழிப்புணர்வு நிகழ்வாகவும் இது அமைந்தது.
இந்நிகழ்வில் சிறப்பு அதிதிகளாகச் சுற்றுலாத்துறை பிரதி அமைச்சர் ருவன் ரணசிங்க, வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் இணைப்புக்குழு பாராளுமன்ற உறுப்பினர் கிட்ணன் செல்வராஜ் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் நிறைவேற்று முகாமையாளர் திருமதி திலகீ ஆகியோர் கலந்துகொண்டனர்.
மேலும், பிரதேசத்தின் முக்கிய அரச அதிகாரிகள் மற்றும் ஹாலியலை பொலிஸ் நிலையத்தின் பொறுப்பதிகாரி உள்ளிட்ட பல அதிகாரிகளும் இதில் பங்கேற்றனர்.
பெற்றோர்கள் வெளிநாடுகளில் இருக்கும் நிலையில், உள்நாட்டில் கல்வி கற்று வரும் 300-க்கும் மேற்பட்ட பாடசாலை மாணவர்களுக்கு இதன்போது கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டன.
கலந்து கொண்ட அதிதிகள் மற்றும் அதிகாரிகள் கையால் மாணவர்கள் இந்த உபகரணங்களைப் பெற்றுக்கொண்டனர்.
வெளிநாடுகளில் பணிபுரியும் தொழிலாளர்களின் பிள்ளைகளின் எதிர்காலக் கல்வியை உறுதிப்படுத்தும் நோக்கில் இவ்வாறான நலன்புரித் திட்டங்கள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

