-Nabishad Abu Hanshif-
கென்யாவின் வடக்குப் பகுதியில் புதன்கிழமை காலை சஃபாரி பயணத்தின்போது ஹெலிகாப்டர் ஒன்று விபத்துக்குள்ளானதில், ஐந்து அமெரிக்கர்கள் உட்பட ஏழு பேர் உயிரிழந்துள்ளதாக உள்ளூர் காவல்துறையும் அமெரிக்க வெளியுறவுத்துறையும் தெரிவித்துள்ளன.
உயிரிழந்தவர்களில் அமெரிக்காவைத் தளமாகக் கொண்ட NBC Universal நிறுவனத்திற்குச் சொந்தமான ஸ்பானிஷ் மொழி தொலைக்காட்சி வலையமைப்பான Telemundo நிறுவனத்தின் நிர்வாகி ஒருவரும், ஈக்வடாரின் தேசிய புலனாய்வு சேவையின் இயக்குநரும் அடங்குகின்றனர்.
கென்யா சிவில் விமானப் போக்குவரத்து ஆணையத்தின் தகவலின்படி, புதன்கிழமை காலை 9.13 மணியளவில், Loisaba Conservancy பகுதியில் இருந்து Samburu County-யில் உள்ள Ewaso Nyiro பகுதிக்கு ஹெலிகாப்டர் சென்றுகொண்டிருந்தபோது விபத்துக்குள்ளானது.
ஹெலிகாப்டரில் ஆறு பயணிகள் மற்றும் விமானி என மொத்தம் ஏழு பேர் இருந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். சம்பவம் தொடர்பான விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
புதன்கிழமை இரவு Samburu காவல்துறைத் தளபதி David Nkoroi, ஹெலிகாப்டரில் பயணித்த ஏழு பேரும் உயிரிழந்துள்ளதாக செய்தியாளர்களிடம் உறுதிப்படுத்தினார்.
அமெரிக்க வெளியுறவுத்துறை வெளியிட்ட அறிக்கையில், உயிரிழந்தவர்களில் ஐந்து பேர் அமெரிக்கக் குடிமக்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், கென்யா அதிகாரிகளுடன் அமெரிக்கத் தூதரகம் தொடர்பில் இருப்பதாகவும், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தூதரக உதவிகள் வழங்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உயிரிழந்தவர்களின் முழுமையான அடையாளங்கள் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படவில்லை. எனினும், அமெரிக்காவின் மியாமி நகரைச் சேர்ந்த உள்ளூர் தொலைக்காட்சி நிறுவனம், Florida மாநிலத்தில் உள்ள பல Telemundo நிலையங்களின் தலைவர் மற்றும் பொது மேலாளரான 55 வயதுடைய José Suárez உயிரிழந்தவர்களில் ஒருவர் என தெரிவித்துள்ளது.
NBC Universal மற்றும் Telemundo நிர்வாகத்தின் கூட்டு அறிக்கையை மேற்கோள்காட்டிய அந்தத் தொலைக்காட்சி நிறுவனம், José Suárez உயிரிழந்த செய்தி தங்களுக்கு மிகுந்த அதிர்ச்சியையும் துயரத்தையும் ஏற்படுத்தியுள்ளதாக தெரிவித்துள்ளது.
Mount Ololokwe மலையின் அடிவாரத்தில் உள்ள கரடுமுரடான பகுதியில் ஹெலிகாப்டர் விழுந்ததாக உள்ளூர் ஊடகங்கள் தெரிவித்துள்ளன. Mount Ololokwe கென்யாவின் பிரபலமான சுற்றுலாத் தலங்களில் ஒன்றாகும்.
இந்த ஹெலிகாப்டர் கென்யாவைச் சேர்ந்த Lady Lori Helicopters நிறுவனத்துக்குச் சொந்தமானது என்றும், அதில் பயணித்தவர்கள் &Beyond என்ற சுற்றுலா நிறுவனத்தின் விருந்தினர்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

