-Nabishad Abu Hanshif-
போட்காஸ்டர்கள் சங்கம் ஏற்பாடு செய்த “Exploring the New Media Landscape” (புதிய ஊடகச் சூழலை ஆராய்தல்) என்ற தலைப்பிலான உயர்மட்ட கலந்துரையாடல் கொழும்பு கிரான்பெல் ஹோட்டலில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் 100-க்கும் மேற்பட்ட டிஜிட்டல் உள்ளடக்க உருவாக்குநர்கள், ஊடகத் துறைசார் நிபுணர்கள் மற்றும் தொழில்துறை பங்குதாரர்கள் கலந்துகொண்டனர்.
நாட்டின் படைப்பாளிகள் பொருளாதாரத்தின் வளர்ச்சியை நிலையான முறையில் முன்னெடுப்பது, கட்டமைப்பு ரீதியான சவால்களை எதிர்கொள்வது மற்றும் புதிய வாய்ப்புகளை அடையாளம் காண்பது தொடர்பில் கலந்துரையாடப்பட்டது.
நிகழ்வில் பிரதான உரையாற்றிய வெகுஜன ஊடக பிரதி அமைச்சர் டாக்டர் கௌஷல்யா ஆரியரத்ன, வளர்ந்து வரும் டிஜிட்டல் ஊடகத் துறைக்கு அரசாங்கம் வலுவான ஆதரவை வழங்கும் எனத் தெரிவித்தார். நவீன தகவல் பரிமாற்றத்தில் சுயாதீன உள்ளடக்க உருவாக்குநர்கள் முக்கிய பங்காற்றுவதாகவும், டிஜிட்டல் தளங்கள் மற்றும் தகவல் தொடர்பாளர்களுக்கான பொறுப்பானதும் வளர்ச்சியடைந்ததுமான சூழலை உருவாக்க அரசு உறுதிபூண்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இலங்கை போட்காஸ்டர்கள் சங்கத்தின் தலைவரும் சட்டத்தரணியுமான நமினி பண்டித, போட்காஸ்டிங் மூலம் மக்கள் பங்கேற்பையும் அரசியல், பொருளாதாரம் மற்றும் நிர்வாகத்தில் வெளிப்படைத்தன்மையையும் அதிகரிக்க முடியும் எனத் தெரிவித்தார்.
டிஜிட்டல் ஊடகங்களும் பாரம்பரிய ஊடகங்களும் ஒன்றுக்கொன்று போட்டியிடுபவை அல்ல என்றும், இரண்டும் ஒன்றையொன்று பூர்த்தி செய்பவை என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
மேலும், இரு துறைகளும் நெருக்கமாக இணைந்து செயற்பட்டு, உயர்ந்த தொழில்துறை தரநிலைகளை உருவாக்குவதுடன், பொருளாதார வாய்ப்புகளையும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.
சங்கத்தின் ஸ்தாபக உறுப்பினரான புரூனோ திவாகர இலங்கையின் டிஜிட்டல் உள்ளடக்க உருவாக்கத் துறை மிக வேகமாக வளர்ச்சியடைந்துள்ளதை நினைவுகூர்ந்ததுடன், தொழில்முறை தரத்தை உயர்த்தவும் நீண்டகால நிலைத்தன்மையை உறுதிப்படுத்தவும் ஒருங்கிணைந்த சங்கத்தின் அவசியத்தையும் வலியுறுத்தினார்.
நிகழ்வில் இடம்பெற்ற நிபுணர் குழு கலந்துரையாடலில் தொழில்நுட்பம், சட்டம் மற்றும் ஊடகத் தொழில்முனைவோர் தொடர்பான முக்கிய விடயங்கள் ஆராயப்பட்டன.
Hari TV நிறுவனத்தின் நிறுவுநரும் பிரதம நிறைவேற்று அதிகாரியுமான லஹிரு முதலிகே, பாரம்பரிய ஒளிபரப்பிலிருந்து டிஜிட்டல் முன்னுரிமை கொண்ட தளங்களுக்கு மாறுவது தொடர்பான அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டார்.
Roar AdX நிறுவனத்தைச் சேர்ந்த உதார தர்மசேன, பார்வையாளர்களின் வயது மற்றும் சமூகப் பின்னணி, திட்டமிட்ட வர்த்தக விளம்பரம் மற்றும் உள்ளடக்க உருவாக்குநர்களுக்கான வருமான வாய்ப்புகள் குறித்து விளக்கினார்.
LAWASIA IT Law அமைப்பின் தலைவரான டாக்டர் சுனில் அபேரத்ன, தரவுப் பாதுகாப்பு, தனியுரிமை உரிமைகள் மற்றும் டிஜிட்டல் ஊடகங்களுக்கான சட்டக் கட்டமைப்புகள் உள்ளிட்ட ஒழுங்குமுறைச் சூழல் தொடர்பில் விளக்கமளித்தார்.
2026ஆம் ஆண்டு நிறுவப்பட்ட இலங்கை போட்காஸ்டர்கள் சங்கம், சட்ட அறிவு, உள்ளடக்க உருவாக்குநர்களின் பாதுகாப்பு, தொழில்முறை மேம்பாடு மற்றும் துறைசார் ஒத்துழைப்பு ஆகியவற்றின் ஊடாக நாட்டின் படைப்பாளிகள் பொருளாதாரத்தை முன்னேற்றுவதற்குத் தொடர்ந்து அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வருகிறது.

