Home இலங்கைச் செய்திகள்மத்திய மலைநாட்டில் கனமழை: நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் வேகமாக உயர்வு!

மத்திய மலைநாட்டில் கனமழை: நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் வேகமாக உயர்வு!

by Nabishad
0 comments

-Nabishad Abu Hanshif-

மத்திய மலைநாட்டில், குறிப்பாக நுவரெலியா மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் கனமழை காரணமாக நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் வெகுவாக உயர்ந்து வருகின்றது.

தொடர்ந்து பெய்து வரும் மழையால் நீர்த்தேக்கங்களுக்கு வரும் நீர்வரத்து அதிகரித்துள்ளதுடன், நுவரெலியா மாவட்டத்தில் உள்ள ஓடைகள், பிரதான ஆறுகள் மற்றும் நீர்வீழ்ச்சிகளிலும் நீர்வரத்து அதிகரித்துக் காணப்படுகின்றது.

ஹட்டன் ஓயா, போடைஸ் ஓயா, டயகம பகுதியில் ஆரம்பமாகும் மகாவலி கங்கை மற்றும் அதனுடன் இணையும் சிற்றாறுகளான காட்மோர் ஓயா, சியத்தலகங்குல ஓயா, கெசல்கமு ஓயா, மரே ஓயா உள்ளிட்ட நீர்நிலைகளிலும் அதிகளவு நீர்வரத்து ஏற்பட்டுள்ளது.

banner

அத்துடன், காட்மோர் நீர்வீழ்ச்சி, மோகினி எல்ல நீர்வீழ்ச்சி, மரே நீர்வீழ்ச்சி, டெவன் நீர்வீழ்ச்சி மற்றும் சென் கிளையர் நீர்வீழ்ச்சி ஆகியவற்றிலும் வழக்கத்திற்கு மாறாக அதிகளவு நீர் கொட்டுகின்றது.

இதன் காரணமாக மலையகப் பகுதியில் உள்ள நீர்த்தேக்கங்களின் நீர்மட்டமும் தொடர்ந்து உயர்ந்து வருகின்றது.

மவுசாகலை நீர்த்தேக்கத்தின் நீர்மட்டம் அதன் முழுக் கொள்ளளவை எட்டுவதற்கு மேலும் சுமார் நான்கு அடி மட்டுமே உள்ளதாகவும், காசல்ரீ நீர்த்தேக்கத்தின் நீர்மட்டம் முழுக் கொள்ளளவை எட்டுவதற்கு மேலும் சுமார் இரண்டு அடி மட்டுமே உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

மேல் கொத்மலை நீர்த்தேக்கம் அதன் முழுக் கொள்ளளவை எட்டியுள்ள நிலையில், கென்யோன், பிராட்லண்ட், லக்சபான, பொல்பிட்டிய, நவ லக்சபான, கலுகல மற்றும் விமலசுரேந்திர உள்ளிட்ட நீர்த்தேக்கங்களின் நீர்மட்டங்களும் கணிசமாக உயர்ந்து வருகின்றன.

நீர்த்தேக்கங்களில் நீர்வரத்து அதிகரித்துள்ளதால், நீர்மின் உற்பத்தி நிலையங்கள் அதிகளவு நீரைப் பயன்படுத்தி மின்சார உற்பத்தியை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

தொடர்ந்தும் கனமழை பெய்யும் பட்சத்தில் நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் மேலும் உயரக்கூடிய சாத்தியம் உள்ளதால், நீர்த்தேக்கங்களை அண்மித்த பகுதிகளில் வசிக்கும் மக்கள் அவதானத்துடன் செயற்படுமாறு அறிவுறுத்தப்படுகின்றனர்.

You may also like

Leave a Comment