India NewsSri Lanka News

இந்திய கடற்றொழிலாளர்கள் இலங்கையில் கைது – மு.க.ஸ்டாலின் ஜெய்சங்கருக்கு கடிதம்

இலங்கையில் சிறை வைக்கப்பட்டுள்ள 80 இந்திய கடற்றொழிலாளர்களையும் விடுவிக்கக் கோரி தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இந்திய மத்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கருக்கு கடிதம் எழுதியுள்ளார்.

மத்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதலமைச்சர் எழுதியுள்ள கடிதத்தில், இலங்கைக் கடற்படையினரால் நேற்று அதிகாலை 14 இந்திய கடற்றொழிலாளர்களும் அவர்களின் மீன்பிடிப் படகு மற்றும் ஒரு பதிவு செய்யப்படாத நாட்டுப்படகும் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

இலங்கைக் கடற்படையினரால் தமிழ்நாட்டு கடற்றொழிலாளர்கள் தொடர்ந்து கைது செய்யப்படுவதை முடிவுக்குக் கொண்டுவர மத்திய அரசு தூதரக ரீதியாக தலையிட வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.

இதுபோன்ற கைது சம்பவங்கள் தொடர்வது மிகவும் கவலையளிப்பதாகவும் 2025 ஆம் ஆண்டில் மட்டும் நடைபெற்ற கைது சம்பவங்களில், இது 17 ஆவது சம்பவம் என்றும் தமிழக முதலமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

தற்போது, 237 மீன்பிடிப் படகுகளும், 80 மீனவர்களும் இலங்கை அதிகாரிகளின் காவலில் இருப்பதால் மீனவர்களின் ஒரே வாழ்வாதாரமான பாரம்பரிய நீர்நிலைகளில் மீன்பிடிக்கும் உரிமையை இழந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

எனவே, கைது செய்யப்பட்ட அனைத்து தமிழக கடற்றொழிலாளர்களையும், அவர்களது மீன்பிடிப் படகுகளையும் விரைவில் விடுவிப்பதற்குத் தேவையான உடனடி நடவடிக்கைகளை எடுக்குமாறு மத்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கரை வலியுறுத்துவதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button