தோஹா: 2026ஆம் ஆண்டின் முதல் ஏழு மாதங்களில் கட்டாரில் உயிரிழந்த இலங்கைப் பிரஜைகளின் சட்டப்பூர்வ வாரிசுகளுக்காக 80.8 மில்லியன் ரூபாவுக்கும் அதிகமான மரண நஷ்டஈட்டுத் தொகையை தோஹாவிலுள்ள இலங்கைத் தூதரகம் மீட்டுள்ளது.
ஜனவரி முதல் ஜூலை 2026 வரையிலான காலப்பகுதியில், பிராந்தியத்தில் நிலவிய பதற்றமான சூழ்நிலைகளுக்கு மத்தியிலும், தூதரகம் மொத்தமாக 80,886,895.32 இலங்கை ரூபாவை மரண நஷ்டஈடாக பெற்றுக்கொடுத்துள்ளது.
இந்தத் தொகையில் 13,229,128 ரூபாய் தூதரகத்தின் முயற்சியால் சம்பந்தப்பட்ட உயிரிழந்தவர்களின் சட்டப்பூர்வ வாரிசுகளுக்கு நேரடியாக வழங்கப்பட்டுள்ளது.
மேலும், 67,657,767.32 ரூபாய் வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சிடம் கையளிக்கப்பட்டுள்ளது. இந்தத் தொகை உரிய பயனாளிகளுக்கு வழங்குவதற்காக அமைச்சின் ஊடாக அனுப்பப்பட்டுள்ளது.
மீட்கப்பட்ட நஷ்டஈட்டுத் தொகையில், 2023ஆம் ஆண்டு முதல் நிலுவையில் இருந்த சில வழக்குகளுக்கான கொடுப்பனவுகளும் உள்ளடங்குகின்றன.
இந்த நஷ்டஈட்டுத் தொகைகளை பெற்றுக்கொடுக்கும் நடவடிக்கையில், கட்டாருக்கான இலங்கைத் தூதுவர் சிதாரா கான் மற்றும் தூதரகத்தின் அமைச்சர் தர்மசிறி விஜேவர்தன ஆகியோர் சம்பந்தப்பட்ட நிறுவனங்கள், இலங்கை வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சின் தூதரக விவகாரப் பிரிவு, கட்டார் அரச அதிகாரிகள் மற்றும் தூதரகத்துடன் இணைந்து பணியாற்றும் சட்ட நிறுவனத்துடன் நெருக்கமாக ஒருங்கிணைந்து செயல்பட்டுள்ளனர்.
இதேவேளை, 2025ஆம் ஆண்டில் மட்டும் தோஹாவிலுள்ள இலங்கைத் தூதரகம் 197,719,710.36 ரூபாய் நஷ்டஈட்டுத் தொகையை மீட்டிருந்தது. அந்தத் தொகை இலங்கையில் உள்ள உயிரிழந்தவர்களின் சட்டப்பூர்வ வாரிசுகளுக்கு வழங்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.
தூதரகத்தின் இந்த நடவடிக்கைகள், கட்டாரில் பணியாற்றும் இலங்கைப் பிரஜைகள் உயிரிழக்கும் சந்தர்ப்பங்களில் அவர்களின் குடும்பங்களுக்கு கிடைக்க வேண்டிய சட்டப்பூர்வ நஷ்டஈட்டுத் தொகைகளை பெற்றுக்கொடுப்பதில் முக்கிய பங்களிப்பாக அமைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

