பற்றி எரியும் எண்ணெய் கிடங்கு; இஸ்ரேல் – ஈரான் இடையே மோதல் தீவிரம்!

ஈரான் அணுசக்தி திட்டங்கள் மற்றும் இராணுவத் தளபதிகளை குறிவைத்து இஸ்ரேல் நேற்று முன்தினம் ஆபரேஷன் ரைசிங் லயன் என்ற வான்வழித் தாக்குதலை நடத்தியது. இதில் 78 பேர் உயிரிழந்ததாகவும், 320 படுகாயமடைந்ததாகவும் ஈரான் ஐநா பிரதிநிதி தெரிவித்தார்.
இதற்கு பதிலடியாக இன்று காலை வரை, ஈரான் “ஆபரேஷன் ட்ரூ பிராமிஸ்” என்ற பெயரில் டெல் அவிவ் மற்றும் ஜெருசலேம் மீது ஏவுகணைகளை ஏவியது. இதில் ஒருவர் கொல்லப்பட்டு, 34 பேர் காயமடைந்தனர். ரிஷோன் லெசியோனில் நடத்தப்பட்ட தாக்குதலில் இருவர் கொல்லப்பட்டு 19 பேர் காயமடைந்தனர்.
நேற்று இரவு முதல் இஸ்ரேல் – ஈரான் நாடுகள் இடையேயான மோதல் தீவிரமடைந்துள்ளது. இரு நாடுகளும் பரஸ்பரம் ஏவுகணைகளை வீசி தாக்குதலில் ஈடுபட்டு வருகின்றன.
இஸ்ரேல் வீசிய ஏவுகணையால் ஈரான் தலைநகர் தெஹ்ரானில் உள்ள எண்ணெய்க் கிடங்கு பற்றி எரிந்து வருகிறது.
ஈரானின் அணு ஆயுதத் திட்டங்களை பல ஆண்டுகளுக்கு தாமதப்படுத்தும் வகையில் தாக்குதல் நடத்தி சேதத்தை ஏற்படுத்தியிருப்பதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது.
கடந்த இரண்டு நாட்களில் இஸ்ரேலின் தாக்குதல்களில் குறைந்தது 80 பேர் கொல்லப்பட்டதாகவும், 800 பேர் காயமடைந்ததாகவும் ஈரானிய ஊடகங்கள் தெரிவிக்கின்றன. கொல்லப்பட்டவர்களில் 20 குழந்தைகள் அடங்குவர்.