Sri Lanka News

நமது நாட்டை சுற்றுலா தலமாக மட்டுமல்லாமல், தனித்துவமான சமையல் கலையைக் கொண்ட நாடாகவும் பிரகாசிக்கச் செய்வோம்..

பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய

சுற்றுலாப் பயணிகளின் சுற்றுலா தலமாக மட்டுமல்லாமல், அனுபவங்களைத் தேடிச் செல்லும் உலகில், தனித்துவமான சமையல் கலையைக் கொண்ட நாடாக இன்னும் கவர்ச்சிகரமானதாக மாற்ற நாம் பாடுபட வேண்டும் என்று பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.

ஜூன் 13 ஆம் திகதி பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்ற இலங்கை சமையல் கலைஞர்கள் சங்கத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட “சமையல் கலை உணவு கண்காட்சி 2025” இன் அங்குரார்ப்பண நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே பிரதமர் இதனைத் தெரிவித்தார்.

உணவு என்பது வெறும் போசனைக்கான ஒரு வழிமுறையாக மட்டுமன்றி, ஒரு நாட்டின் கலாசாரம், அழகான நினைவுகள், சுதேச அடையாளம் மற்றும் உரிமைகளின் சக்திவாய்ந்த வெளிப்பாடாகவும் இருக்கும் என்பதை நினைவில் கொள்வது அவசியம். இலங்கை இயற்கை அழகால் மட்டுமன்றி, சுவையும் படைப்பாற்றலும் சிறந்து விளங்கும் இடமாக நாட்டை நிலைநிறுத்துவதில் சமையல் முக்கிய பங்கு வகிக்கிறது என்றும் பிரதமர் கூறினார்.

மேலும், CAFE (சமையல் கலை உணவு கண்காட்சி) இலங்கையின் தொழில்முறை சமையல்காரர்கள், பயிலுனர்கள் மற்றும் தொழில் வல்லுநர்கள் போட்டியிடுவதோடு மட்டுமல்லாமல், ஒருவருக்கொருவர் கற்றுக்கொள்ளவும், கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளவும், வெளிநாடுகளைச் சேர்ந்த சமையல்காரர்களுடன் உறவுகளை உருவாக்கவும் ஒரு முக்கிய இடமாக மாறியுள்ளது. இது ஒரு கண்காட்சி என்பதைப் பார்க்கிலும் மேலானது, திறமை, பாரம்பரியம், ஒத்துழைப்பு மற்றும் உணவு ஆகியவற்றால் ஈர்க்கப்பட்ட எல்லையற்ற படைப்பாற்றலின் கொண்டாட்டமாக மாறியுள்ளது என்றும் பிரதமர் கூறினார்.

இந்த அங்குரார்ப்பண விழாவில் இலங்கை சமையல்கலைஞர்கள் சங்கத்தின் தலைவர் சிரேஷ்ட சமையல்கலைஞர் ஜெரார்ட் மெண்டிஸ், நெஸ்லே லங்காவின் தலைவர் பெர்னார்ட் ஸ்டீபன், CDC Events & travels தலைவர் சந்திரா விக்ரமசிங்க மற்றும் House of ASRIEL இன் தலைவர் ஷிரான் பீரிஸ். ஏராளமான நிறுவனங்களின் பிரதிநிதிகள் மற்றும் பல்வேறு துறைகளைச் சேர்ந்த நிபுணத்துவ சமையல்காரர்கள் உட்பட பெருமளவானோர் கலந்து கொண்டனர்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button