Sri Lanka News

நீதியரசர்களின் ஓய்வுபெறும் வயது குறித்த சர்ச்சை! நீதி அமைச்சர் வெளியிட்ட அறிவிப்பு

அரசாங்கம் நீதித்துறையின் தற்போதைய கட்டமைப்பில் தலையிடவில்லை என்று நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார ஊடகங்களிடம் தெரிவித்தார்.

உயர்நீதிமன்ற மற்றும் மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்களின் ஓய்வுபெறும் வயதெல்லையை அதிகரிப்பதற்கு அரசாங்கம் திட்டமிட்டுள்ளது என்று எதிர்க்கட்சிகளால் முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுகளையும் அவர் மறுத்துள்ளார்.

அமைச்சரவையில் இது தொடர்பாக எந்தவொரு கலந்துரையாடலும் நடைபெறவில்லை.

எனவே, அரசியல் ரீதியாக முன்வைக்கப்படும் இத்தகைய ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை நான் நிராகரிக்க வேண்டிய அவசியம் கூட இல்லை என்றும் அவர் தெரிவித்தார்.

முன்னாள் அமைச்சர்களான பேராசிரியர் ஜி.எல். பீரிஸ் மற்றும் கலாநிதி விஜயதாஸ ராஜபக்ஷ ஆகியோர் அண்மையில் விடுத்திருந்த அறிக்கையில், உயர் நீதிமன்ற நீதியரசர்களின் ஓய்வுபெறும் வயதெல்லையை அதிகரிப்பதற்கான அரசாங்கத்தின் முன்மொழிவு அரசமைப்பின் உறுப்புரையை மீறும் செயல் என்று தெரிவித்திருந்தனர்.

சட்டத்தின் முன் அனைவரும் சமம் எனும் கோட்பாட்டுக்கு இது முரணானது என்றும் அவர்கள் வாதிட்டிருந்தனர்.

இலங்கை அரசமைப்பின் 107 ஆவது உறுப்புரையின் கீழ், உயர் நீதிமன்ற நீதியரசர்களின் பதவிக்காலம் மற்றும் சுதந்திரம் தொடர்பான பாதுகாப்புகள் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளன.

உயர்நீதிமன்ற நீதியரசர்களின் ஓய்வுபெறும் வயது 65 ஆகும். மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்களின் ஓய்வுபெறும் வயது 63 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

நீதித்துறையின் சுதந்திரத்தைப் பேணுவதற்காக இந்த வயது எல்லைகள் அரசமைப்பில் உள்ளீர்க்கப்பட்டுள்ளன.

இதில் ஏதேனும் மாற்றங்களை மேற்கொள்வதாயின், அதற்கு முறையான அரசமைப்பு திருத்தம் அவசியமாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button