அஸ்வெசும கொடுப்பனவு அதிகரிப்பு; எரிபொருளுக்கு மானியம்! ஜனாதிபதி அறிவிப்பு

குறைந்த வருமானம் பெறும் அஸ்வெசும பயனாளர்கான 17,500 கொடுப்பனவு 25,000 ருபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
பாராளுமன்றத்தில் சற்றுமுன்னர் அவர் இந்த அறிவிப்பை வெளியிட்டார்.
குறித்த கொடுப்பனவு ஏப்ரல் மாதம் மாத்திரம் அதிகரிக்கப்பட்டுள்ளது.
மேலும் தற்போதைய உலகப் போர்ச் சூழலினால் நாட்டின் பல துறைகள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், ஒரு அரசாங்கம் என்ற ரீதியில் அது குறித்து அவதானம் செலுத்தியுள்ளதாகவும் ஜனாதிபதி இங்கு தெரிவித்தார்.
இதன்போது எரிபொருள் மற்றும் வலுசக்தி குறித்து விசேட கவனம் செலுத்தப்பட்டதாகக் குறிப்பிட்ட ஜனாதிபதி, எரிபொருள் செலவினங்களுக்கு ஏற்ப விலைகளைத் திருத்தியமைக்கும் போது மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படுவதாகவும் சுட்டிக்காட்டினார்.
சந்தைப் பெறுமதிக்கு இணங்க, தற்போது ஒரு லீற்றர் டீசலின் விலை 600 ரூபாயைத் தாண்டியுள்ளதாகவும் ஜனாதிபதி இங்கு சுட்டிக்காட்டினார்.
எதிர்வரும் மே மாதம் முதலாம் திகதி அல்லது அதற்கடுத்த தினமொன்றில் எரிபொருளுக்கான புதிய செலவு அடிப்படையிலான விலைக் சூத்திரத்தை நாங்கள் கொண்டு வருகிறோம்.
அந்தச் செலவு முந்தைய மாதத்தின் உண்மையான தரவுகளின் அடிப்படையில் கணக்கிடப்படும்.
அடுத்த எரிபொருள் விலை திருத்தத்தின் போது, உண்மையான செலவைக் கணக்கிட்டு, ஒரு லீற்றர் டீசலுக்கு 100 ரூபாய் வரை மானியம் வழங்கவும், ஒரு லீற்றர் பெற்றோலுக்கு 20 ரூபாய் வரை மானியம் வழங்கவும் தீர்மானித்துள்ளோம்.
இதன்படி கணக்கிடும் போது, ஒரு மாதத்திற்கு 20 பில்லியன் ரூபாய், அதாவது 2,000 கோடி ரூபாய் செலவாகும். மூன்று மாதங்களுக்கான இந்த முன்மொழிவை நாங்கள் தயாரித்துள்ளோம்.
இலக்கு வைக்கப்பட்ட மக்களுக்கே இந்த மானியங்களை நாம் வழங்க வேண்டும்.
இருப்பினும், முறையான தரவுகள் இல்லாததால், சூப்பர் டீசல் மற்றும் சூப்பர் பெட்ரோல் விலைகளை சந்தை விலைக்கு ஏற்ப மாற்றியமைக்க தீர்மானித்துள்ளதாக ஜனாதிபதி தெரிவித்தார்.
அதன்படி, பொதுவாக ஒவ்வொரு லீற்றர் டீசலுக்கும் 100 ரூபாய் செலவை அரசாங்கமே ஏற்க தீர்மானித்துள்ளதாகவும், இதற்காக மூன்று மாத காலத்திற்கு அரசாங்கத்திற்கு 6,000 கோடி ரூபாய் செலவாகும் என்றும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.




