Home இலங்கைச் செய்திகள்பாகிஸ்தான் சந்தையில் முதன்முறையாகக் கால்பதிக்கும் இலங்கை அன்னாசி:

பாகிஸ்தான் சந்தையில் முதன்முறையாகக் கால்பதிக்கும் இலங்கை அன்னாசி:

by Nabishad
0 comments

சுமார் 252 மில்லியன் நுகர்வோரைக் கொண்ட பாகிஸ்தானின் பிரம்மாண்டமான சந்தையை இலக்கு வைத்து, இலங்கையிலிருந்து முதன்முறையாக புதிய அன்னாசிப் பழங்கள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன.

‘சி.ஆர் எக்ஸ்போர்ட்ஸ்’ தனியார் நிறுவனத்தினால் தயார்படுத்தப்பட்ட 20 அடி கொள்கலன் அடங்கிய முதலாவது அன்னாசிக் தொகுதி பாகிஸ்தானை நோக்கி அனுப்பப்பட்டுள்ளது.

ஆண்டுதோறும் சுமார் 10 மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான அன்னாசிப் பழங்களை இறக்குமதி செய்யும் பாகிஸ்தான் சந்தையில், இதுவரை தாய்லாந்து மற்றும் பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகளே ஆதிக்கம் செலுத்தி வந்தன.

இருப்பினும், இலங்கையின் புவியியல் அண்மை, தரமான சுவை மற்றும் பசுமைத் தன்மை காரணமாக, விரைவிலேயே அங்குள்ள சந்தைப் பங்கினை அதிகளவில் கைப்பற்ற முடியும் என இலங்கை அதிகாரிகள் நம்பிக்கை வெளியிட்டுள்ளனர்.

banner

பாகிஸ்தானின் தாவர பாதுகாப்பு நிறுவனத்தைச் சேர்ந்த பூச்சியியல் ஆய்வாளர் ஒருவர் இலங்கைக்கு வருகை தந்து, பயிர்ச்செய்கை நிலங்கள் மற்றும் பொதியிடும் மையங்களை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

அதனடிப்படையில் வழங்கப்பட்ட தொழில்நுட்ப அங்கீகாரத்தைத் தொடர்ந்து, விவசாய திணைக்களத்தில் பதிவுசெய்யப்பட்டு ‘நல் விவசாய நடைமுறைகள்’ (GAP) சான்றிதழ் பெற்ற பண்ணைகளிலிருந்து மாத்திரமே இந்த அன்னாசிப் பழங்கள் கொள்முதல் செய்யப்பட்டுள்ளன.

இலங்கை ஏற்றுமதி மேம்பாட்டுச் சபை, விவசாயத் திணைக்களம், தேசிய தாவர தனிமைப்படுத்தல் சேவை மற்றும் இரு நாடுகளின் உயாஸ்தானிகராலயங்கள் ஆகியவற்றின் ஒருங்கிணைந்த முயற்சியால் இந்த வர்த்தக வாசல் திறக்கப்பட்டுள்ளது. 2025 ஆம் ஆண்டில் அன்னாசிப் பொருட்கள் மூலம் சுமார் 2 மில்லியன் அமெரிக்க டொலர்களை ஈட்டிய இலங்கை, 2030 ஆம் ஆண்டிற்கான ஏற்றுமதி இலக்குகளை எட்டுவதற்கு பாகிஸ்தான் போன்ற புதிய சந்தைகள் மிக அத்தியாவசியமானவை எனக் கருதுகிறது.

மேலும், இந்த நகர்வு இலங்கை-பாகிஸ்தான் சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்தின் பலன்களை முழுமையாக அறுவடை செய்ய உதவுவதோடு, எதிர்காலத்தில் அவகாடோ மற்றும் நாரத்தை போன்ற ஏனைய விவசாய விளைபொருட்களையும் பாகிஸ்தானுக்கு ஏற்றுமதி செய்வதற்கான வழியையும் ஏற்படுத்தியுள்ளது.

You may also like

Leave a Comment