Sports

நியூசிலாந்து அணி இறுதிப் போட்டிக்கு தகுதி

2026 ஐசிசி ஆண்கள் டி20 உலகக் கிண்ணத் தொடரின் விறுவிறுப்பான முதலாவது அரையிறுதிப் போட்டியில், தென்னாபிரிக்க அணியை 9 விக்கெட்டுகளால் வீழ்த்தி நியூசிலாந்து அணி அபார வெற்றி பெற்று, இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றுள்ளது.

கொல்கத்தா, ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற நியூசிலாந்து அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபடத் தீர்மானித்தது. இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடக் களமிறங்கிய தென்னாபிரிக்க அணி, ஆரம்பத்தில் சில விக்கெட்டுகளை இழந்து சற்றுத் தடுமாறியது.

எனினும், அதிரடியாகத் துடுப்பெடுத்தாடிய மார்கோ ஜான்சன் 54 ஓட்டங்களையும், இளம் வீரர் டெவால்ட் ப்ரீவிஸ் 34 ஓட்டங்களையும் பெற்று அணியின் ஓட்ட எண்ணிக்கையை கணிசமாக உயர்த்தினர். இவர்களின் சிறப்பான இணைப்பாட்டத்தின் மூலம் தென்னாபிரிக்க அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 169 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது.

நியூசிலாந்து அணி சார்பில் பந்துவீச்சில் ரச்சின் ரவீந்திரா, கோல் மெக்கொன்சி மற்றும் மேட் ஹென்றி ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினர்.

170 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கிப் பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய நியூசிலாந்து அணி, ஆரம்பம் முதலே அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தியது. தென்னாபிரிக்கப் பந்துவீச்சாளர்களைத் திணறடித்த ஆரம்பத் துடுப்பாட்ட வீரர்களான டிம் சீஃபர்ட் மற்றும் பின் ஆலன் ஆகியோர் ருத்ரதாண்டவம் ஆடினர். மைதானத்தின் நாலாபுறமும் சிக்ஸர்களைப் பறக்கவிட்டனர், டிம் சீஃபர்ட் 58 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்த நிலையில், வெறும் 33 பந்துகளில் சதம் விளாசி, டி20 உலகக்கிண்ண வரலாற்றில் அதிவேகச் சதம் என்ற மாபெரும் சாதனையைப் பின் ஆலன் படைத்தார்.

8 ஆறு ஓட்டங்கள் மற்றும் 10 நான்கு ஓட்டங்கள் அடங்களாக அவர் இந்த சாதனையை படைத்தார்.

ஆட்டமிழக்காமல் 100 ஓட்டங்களைப் பெற்ற அவரது இந்த வரலாற்று அதிரடி ஆட்டத்தின் உதவியுடன், நியூசிலாந்து அணி வெறும் 12.5 ஓவர்களில் ஒரு விக்கெட்டை மாத்திரம் இழந்து 173 ஓட்டங்களைப் பெற்று, இமாலய வெற்றியைப் பதிவு செய்தது. இந்த வெற்றியின் மூலம் 2026 டி20 உலகக்கிண்ணத் தொடரின் இறுதிப்போட்டிக்கு முன்னேறும் முதலாவது அணியாக நியூசிலாந்து தகுதி பெற்றுள்ளது.

Related Articles

Back to top button