Sri Lanka News

புதிய திரிபுகளுடன் பரவுகிறது டெங்கு வைரஸ்: பொதுமக்கள் விழிப்புடன் இருக்குமாறு அவசர வேண்டுகோள்!

நாட்டில் தற்போது பரவி வரும் டெங்கு வைரஸானது புதிய மரபணுத் திரிபுகளுடன் தீவிரமடைந்துள்ளதாக சுகாதார மற்றும் ஊடகத்துறை பிரதி அமைச்சர் ஹம்சக்க விஜேமுனி தெரிவித்துள்ளார்.

ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

கடந்த காலங்களில் பரவிய டெங்கு வைரஸுடன் ஒப்பிடுகையில், தற்போது பரவி வரும் புதிய வைரஸில் பல மாற்றங்கள் காணப்படுகின்றன.

இந்த புதிய மாற்றங்களைக் கொண்ட வைரஸ் இதற்கு முன்னர் இலங்கை மக்களுக்குத் தொற்றியிருக்கவில்லை.

இதன் காரணமாக, நாட்டில் உள்ள பெரும்பாலானோருக்கு இந்த புதிய டெங்கு வைரஸ் மிக வேகமாகத் தொற்றக்கூடிய சாத்தியக்கூறுகள் அதிகமாகக் காணப்படுகின்றன.

பொதுவாக ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பது வழக்கம் என்பதால், அரசாங்கம் ஆரம்பத்திலிருந்தே ஓரளவிற்குத் தயாராகவே இருந்தது.

எனினும், இம்முறை வைரஸின் தன்மையில் ஏற்பட்டுள்ள மாறுபாடு காரணமாகப் பாதிப்பு அதிகமாக இருக்கக்கூடும் எனச் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.தற்போது நுளம்புகளின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்துவதற்கும், வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்படும் நோயாளர்களின் நிலைமை தீவிரமடையாமல் அவர்கள் முழுமையாகக் குணமடைந்து வீடு திரும்புவதற்கும் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் அரசாங்கம் எடுத்து வருகிறது.

அதேவேளையில், பொதுமக்களாகிய நீங்களும் உங்கள் தரப்பில் செய்யக்கூடிய அதிகபட்ச பங்களிப்பை வழங்கி, சுற்றுப்புறத்தைத் தூய்மையாகப் பராமரிக்க வேண்டும் என அவசர வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Related Articles

Back to top button