Sri Lanka News

சம்மாந்துறை பிரதேச சபை அமர்வை பார்வையிட்ட அல் முனீர் பாடசாலை மாணவ தலைவர்கள்!

SOCIAL TV
தில்சாத் பர்வீஸ்

மாணவர்களுக்கு அரசியல் அமைப்புகள், நிர்வாக செயல்முறைகள் மற்றும் மக்களாட்சியின் நடைமுறை அனுபவத்தை வழங்கும் நோக்கில், அல் முனீர் பாடசாலையைச் சேர்ந்த மாணவ தலைவர்கள் குழு சம்மாந்துறை பிரதேச சபையின் மாதாந்த அமர்வை பாடசாலை அதிபர் ஏ.அப்துல் ரஹீமின் வழிகாட்டுதலில் இன்று (15) செவ்வாய்க்கிழமை நேரில் சென்று பார்வையிட்டனர்.

இவ்வாறு மாணவர்கள், மக்களுடைய பிரச்சனைகள் எவ்வாறு விவாதிக்கப்படுகின்றன, தீர்மானங்கள் எவ்வாறு எடுக்கப்படுகின்றன, ஒரு மக்கள் பிரதிநிதியின் பங்கு என்ன என்பது போன்ற விடயங்களை நேரடியாகக் கற்றுக்கொண்டனர்.

பிரதேச சபை செயலாளர்கள் மற்றும் உறுப்பினர்கள் மாணவர்களை வரவேற்று, அமர்வின் முக்கியத்துவம், சபையின் வேலைத்திட்டங்கள் மற்றும் பொதுமக்கள் சேவைகள் குறித்து விளக்கி வைத்தனர்.

பாடசாலை ஆசிரியர் குழுவினர் தெரிவித்ததாவது: “மாணவர்கள் புத்தகத்தில் மட்டுமல்லாமல், செயல்முறை அனுபவத்தாலும் கற்றால், அது அவர்களின் அறிவை விரிவுபடுத்தும். இந்த பயணம் மாணவர்களின் எதிர்கால சமூக விழிப்புணர்வுக்கு ஒரு நல்ல தொடக்கமாக அமையும்” எனக் கூறினர்.

மேலும் கருத்து தெரிவிக்கையில் “சம்மாந்துறை வரலாற்றில் பாடசாலை மாணவர்களுக்கு பிரதேச சபை அமர்வை நேரடியாக பார்வையிட முதன் முதலில் சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது. இது வரலாற்று சாதனையாகும்” என்று தெரிவித்தனர்.

இந்த அனுபவம், மாணவ தலைவர்கள் இடையே சமூக பொறுப்புணர்வையும், வழிகாட்டல் திறனையும் வளர்த்ததோடு, மக்கள் சார்ந்த நிர்வாக அமைப்புகள் குறித்து நேரடி புரிதலையும் வழங்கியமை குறிப்பிடத்தக்கது.

இந்நிகழ்வில், பிரதி அதிபர் எம்.சீ.முபாரக் அலி, பாடசாலை அபிவிருத்தி சங்க நிறைவேற்று குழு செயலாளர் வீ.எம். முஹம்மட் என பலரும் கலந்து கொண்டனர்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button