மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் தலைமையில் விசேட கலந்துரையாடல்!
2026 ஆம் ஆண்டின் சிறுபோக நெல் அறுவடைகளை அரசாங்க உத்தரவாத விலையில் கொள் முதல் செய்வதற்கான வேலைத்திட்டம் மற்றும் அரிசி ஆலை உரிமையாளர்களுக்கான வட்டியற்ற கடன் வழங்கும் திட்டம் தொடர்பான விசேட கலந்துரையாடல், மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் தலைமையில் இன்று (21) மன்னார் மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது.
நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் வழிகாட்டலுக்கு அமைவாக ஏற்பாடு செய்யப்பட்ட இக்கூட்டத்தில் மாவட்ட விவசாயப் பணிப்பாளர், பிரதம கணக்காளர், திட்டமிடல் பணிப்பாளர் திணைக்கள அதிகாரிகள், பலநோக்குக் கூட்டுறவுச் சங்கங்களின் பிரதிநிதிகள் மற்றும் பதிவு செய்யப்பட்ட தனியார் அரிசி ஆலை உரிமையாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் தலைமை வகித்து உரையாற்றிய மாவட்ட அரசாங்க அதிபர், இச் சிறுபோக அறுவடை ஆரம்பித்தது முதல் அரசாங்கத்தின் மூலம் நெல் சந்தைப்படுத்தல் சபையின் ஊடாக நெல் கொள்வனவு செய்யும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வந்ததாகவும்,
மேலும், மாவட்டத்தில் விவசாயிகள் தொடர்ந்து அறுவடைகளை முடித்து நெல்லை வைத்திருக்கும் நிலையில், அவர்கள் அதை விற்பனை செய்வதற்கு எதிர்பார்ப்புடன் காத்திருப்பதால் அரசாங்கத்தினால் தற்போது புதிய சுற்றுநிருபம் வெளியிடப்பட்டுள்ளதாக குறிப்பிட்ட அவர், அதன்படி பலநோக்குக் கூட்டுறவுச் சங்கங்கள் மற்றும் பதிவு செய்யப்பட்ட தனியார் அரிசி ஆலை உரிமையாளர்களுக்கு அரசாங்கத்தின் ஊடாக வட்டியற்ற கடன்களை வழங்கி, விவசாயிகள் வைத்திருக்கும் நெல்லைக் கொள்வனவு செய்ய நடவடிக்கை ஆரம்பிக்கப்படவுள்ளதாக கூறினார்.

