-Socialtv செய்தி பிரிவு முகாமையாளர் ஷிஹானா நௌபர் –
இலங்கையின் நீண்டகாலக் கல்வி மற்றும் மதிப்பீட்டு முறைகளில் பாரிய மாற்றங்களைக் கொண்டுவர அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாகப் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்.
வெறுமனே பரீட்சைகளை மட்டுமே மையமாகக் கொண்டு மாணவர்களை மதிப்பிடும் தற்போதைய முறையிலிருந்து விலகி, அவர்களின் திறன்கள், படைப்பாற்றல், அனுபவ வழிக் கற்றல் மற்றும் முழுமையான ஆளுமை வளர்ச்சியை ஊக்குவிக்கும் நவீன கல்வி முறைமை உருவாக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
கொழும்பில் அமெரிக்க-இலங்கை ஃபுல்பிரைட் ஆணைக்குழுவினால் அண்மையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த “250 Years of Educational Excellence: Lessons from a Sri Lankan American” என்ற தலைப்பிலான பகிரங்க விரிவுரையில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே பிரதமர் இதனைத் தெரிவித்தார்.
கல்வித்துறை சார்ந்த வல்லுநர்கள், கல்விமான்கள் மற்றும் கொள்கை வகுப்பாளர்கள் பலர் கலந்துகொண்ட இந்நிகழ்வில் உரையாற்றிய அவர், தற்போதைய கல்வி மறுசீரமைப்புகளின் முக்கிய நோக்கமே மாணவர்களின் அடைவுகளை வெறும் தேர்வுப் புள்ளிகள் மூலம் மட்டுமே அளவிடும் முறையை மாற்றுவதாகும் எனக் கூறினார்.
நவீன உலகின் சவால்கள் மற்றும் தேவைகளுக்கு ஏற்ப மாணவர்களைத் தயார்படுத்தும் வகையில், செயல்முறை வழியிலான மற்றும் அனுபவப் பகிர்வு சார்ந்த கற்றல் கற்பித்தல் முறைகள் அறிமுகப்படுத்தப்படவுள்ளதாகவும் அவர் விளக்கிப் பேசினார். அதேவேளை, நாட்டின் தற்போதைய கல்விமுறையிலுள்ள வெற்றிகரமான அம்சங்கள் எவையும் கைவிடப்பட மாட்டாது என்று உறுதியளித்த பிரதமர், அவற்றை மேலும் நவீனப்படுத்தி எதிர்காலத் தேவைகளுக்கு ஏற்ப தகவமைப்பதே அரசாங்கத்தின் இலக்கு என்றும் தெளிவுபடுத்தினார்.

