Uncategorized

சுகாதார சீர்கேட்டுடன் இயங்கிய உணவகங்களுக்கு சீல்!

Nabishad Abu Hanshif

முல்லைத்தீவு மாவட்டத்தின் முல்லைத்தீவு சுகாதார வைத்திய அதிகாரி பணிமனைக்குட்பட்ட முல்லைத்தீவு பொதுச் சந்தைக்கு அருகில் சுகாதார விதிமுறைகளை மீறி செயற்பட்ட இரு உணவகங்களுக்கு எதிராக பொது சுகாதார பரிசோதகர்கள் அதிரடி நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர்.

பொதுமக்களிடமிருந்து கிடைத்த முறைப்பாடுகளைத் தொடர்ந்து முல்லைத்தீவு பொது சுகாதார பரிசோதகர் பிரவீன் மற்றும் தண்ணீரூற்று பொது சுகாதார பரிசோதகர் கஜலவன் ஆகியோர் இணைந்து முல்லைத்தீவு நகரை அண்டிய உணவகங்களில் திடீர் சோதனைகளை மேற்கொண்டனர்.

சோதனைகளின் போது சுகாதார சீர்கேட்டுடன் உணவுகள் தயாரித்து விற்பனை செய்யப்பட்டமை, ஈக்கள் மொய்த்த நிலையில் உணவுகள் வைக்கப்பட்டமை, பாத்திரங்களை தூய்மையாக வைத்திருக்காமை, மருத்துவ சான்றிதழ் இன்றி ஊழியர்கள் உணவுகளை கையாண்டமை உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகள் கண்டறியப்பட்டதனையடுத்து சம்பந்தப்பட்ட இரு உணவகங்களுக்கு எதிராக பொது சுகாதார பரிசோதகர் பிரவீனால் நேற்றையதினம் (25) முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது

வழக்கை விசாரித்த நீதிமன்றம், இரு உணவகங்களுக்கும் ஐம்பதாயிரம் ரூபாய் , நாட்பதாயிரம் ரூபாய் வீதம் மொத்தமாக தொண்நூறாயிரம் ரூபாய் தண்டப்பணம் விதித்ததுடன், இரு உணவகத்தையும் சீல் செய்வதற்கும் அனுமதி வழங்கியது.

அதன்பேரில் சம்பவ இடத்திற்குச் சென்ற தண்ணீரூற்று பொது சுகாதார பரிசோதகர் கஜலவன் மற்றும் முல்லைத்தீவு பொது சுகாதார பரிசோதகர் பிரவீன் ஆகியோரால் நீதிமன்ற உத்தரவின் பேரில் குறித்த இரு உணவகத்தையும் நேற்றையதினம் (25) சீல் வைத்தனர்.

பொது சுகாதார விதிமுறைகளை பின்பற்றாத விற்பனை நிலையங்களுக்கு எதிராக எதிர்காலத்திலும் திடீர் சோதனைகள் மற்றும் சட்ட நடவடிக்கைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்படும் என பொது சுகாதார பரிசோதகர்கள் தெரிவித்துள்ளனர்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button