ரயில் வேகக்கட்டுப்பாடுகளைக் கடுமையாகப் பின்பற்றத் தீர்மானம்

இனிவரும் காலங்களில் வேகக்கட்டுப்பாடுகளைக் கடுமையாகப் பின்பற்றி ரயில்களை இயக்க நடவடிக்கை எடுக்கவுள்ளதாக லோகோமோட்டிவ் ஒபரேட்டிவ் பொறியியலாளர் சங்கத்தின் தலைவர் ஜீவ குணவர்தன தெரிவித்துள்ளார்.
இதன் காரணமாக ரயில் போக்குவரத்தில் சில தாமதங்கள் ஏற்படக்கூடும் என்றும் அவர் வலியுறுத்தினார். சமீபத்தில் வாத்துவ பகுதியில் தடம் புரண்டு விபத்துக்குள்ளான ‘சாகரிகா’ ரயிலின் சாரதிகள் பணிநீக்கம் செய்யப்பட்டமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும், இது ஒரு தொழிற்சங்க நடவடிக்கை அல்ல என்று ஜீவ குணவர்தன குறிப்பிட்டார். “சாகரிகா ரயில் வாத்துவ ரயில் நிலையத்திற்கு அருகில் தடம் புரண்டது. அதன் பின்னர் நேற்று (26) அந்த ரயிலில் இருந்த சாரதி உள்ளிட்ட பணியாளர்கள் பணி இடைநீக்கம் செய்யப்பட்டனர்.
இது தவறான முடிவு என்பதை நாம் நிர்வாகத்திடம் தெரிவித்தோம். தற்போது அவர்கள் பணிக்குச் சமுகமளிக்கின்றனர், ஆனால் அவர்களிடம் வேலை வாங்கப்படுவதில்லை.
இந்த விபத்து தற்காலிக வேகக்கட்டுப்பாடு உள்ள இடத்தில் நடக்கவில்லை. ரயில் ஓடிக்கொண்டிருந்தபோது தடம் புரண்டுள்ளது. சாரதியோ அல்லது பணியாளர்களோ இதைத் திட்டமிட்டுச் செய்யவில்லை. ஆனால் முதலில் ரயில் பணியாளர்கள் மட்டுமே பணி இடைநீக்கம் செய்யப்பட்டனர். இதற்கு நாம் கடும் எதிர்ப்பைத் தெரிவிக்கிறோம்.” “எங்களுக்கு வழங்கப்படும் ரயில்களில் பல குறைபாடுகள் உள்ளன.
அதேபோல் ரயில் தண்டவாளங்களும் முறையான பராமரிப்புடன் இல்லை. இவ்வாறான நிலையில் ரயில் பணியாளர்களை மட்டும் பணி இடைநீக்கம் செய்வதை வன்மையாகக் கண்டிக்கிறோம். வழங்கப்பட்டுள்ள நேர அட்டவணைக்கு ஏற்ப ரயில்களைச் சரியான நேரத்திற்கு இயக்குவதற்காக, ரயில் சாரதிகள் தமது வேலையை ஆபத்தில் வைத்தே ரயில்களைச் செலுத்துகின்றனர்.” “அதனால், இனிவரும் காலங்களில் அந்த அபாயத்தை எதிர்நோக்காமல் ரயில்களை இயக்கத் தீர்மானித்துள்ளோம். ரயில்கள் இயங்கும், ஆனால் சிறிய தாமதங்கள் ஏற்படலாம். இயங்கும் ரயில்களில் பெரிய தொழில்நுட்பக் குறைபாடுகள் உள்ளன. திணைக்களத்தின் உயர்மட்ட அதிகாரிகள் வேகக்கட்டுப்பாடுகளைப் பின்பற்றுமாறு கூறினாலும், சுமார் 80 சதவீதமான ரயில்களில் வேகத்தைக் கணிப்பதற்கான ‘மீட்டர்’ உள்ளிட்ட உபகரணங்கள் இல்லை. எனவே, குறைபாடுகள் உள்ள ரயில்களைத் திருத்திக் கொடுக்குமாறு கால அவகாசம் கோருகிறோம். அவ்வாறு செய்யத் தவறினால், அத்தகைய ரயில்களை இயக்குவதிலிருந்து விலகத் தீர்மானித்துள்ளோம்” என அவர் மேலும் தெரிவித்தார்.




