Sri Lanka News

அம்பாறையில் துப்பாக்கிச் சூடு – சந்தேகநபரை கைது செய்ய முயன்றபோது பரபரப்பு

அம்பாறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் சட்டவிரோத மதுபான விற்பனையுடன் தொடர்புடைய ஒருவரைக் கைது செய்யச் சென்றபோது துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

நேற்று (17) இரவு இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் மேற்கொண்ட சோதனை நடவடிக்கையின் போது, சந்தேகநபர் உத்தியோகத்தர்களின் கடமைக்கு இடையூறு விளைவித்து, அவர்கள் மீது தாக்குதல் நடத்த முயன்றதாக கூறப்படுகிறது.

இதனைத் தொடர்ந்து சந்தேகநபர் கைது செய்யப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அங்கிருந்து அவர் தப்பிச் சென்றுள்ளார்.

பின்னர் நடமாடும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்த பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் சந்தேகநபரை மீண்டும் கைது செய்ய முற்பட்டபோது, அவர் அந்த உத்தியோகத்தரின் துப்பாக்கியைப் பறிக்க முயன்றதாக தெரிவிக்கப்படுகிறது.

இதனால் ஏற்பட்ட பதற்றமான சூழ்நிலையில், சந்தேகநபர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாகவும், காயமடைந்த அவர் மீண்டும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்தச் சம்பவத்தில் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரும் காயமடைந்து வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Related Articles

Back to top button