Sports

டெல்லி அணியின் பயிற்றுவிப்பாளர் குழுவில் யுவராஜ் சிங்? வெளியான முக்கிய தகவல்

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் நட்சத்திர சகலதுறை வீரர் யுவராஜ் சிங், 2027ஆம் ஆண்டு ஐ.பி.எல் தொடரில் டெல்லி கெப்பிட்டல்ஸ் அணியின் பயிற்றுவிப்பாளர் குழாமில் இணையவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதனை அணியின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் உறுதிப்படுத்தியுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

டெல்லி கெப்பிட்டல்ஸ் அணியை இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை GMR மற்றும் JSW ஆகிய நிறுவனங்கள் மாறி மாறி நிர்வகித்து வருகின்றன.

கடந்த இரு வருடங்களாக GMR நிறுவனம் அணியை வழிநடத்திய நிலையில், 2027 முதல் அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு JSW நிறுவனம் நிர்வாகப் பொறுப்பை ஏற்கவுள்ளது.

இதன்படி, JSW நிறுவனத்தின் கீழ் டெல்லி அணியின் கிரிக்கெட் பணிப்பாளராக மீண்டும் பொறுப்பேற்கவுள்ள சௌரவ் கங்குலியின் விருப்பத்திற்கு அமையவே, யுவராஜ் சிங் இந்த பதவியில் அமர்த்தப்படவுள்ளதாக கூறப்படுகின்றது.

கடந்த 2025 மற்றும் 2026ஆம் ஆண்டு ஐ.பி.எல் தொடர்களில் அக்சர் பட்டேல் தலைமையில் களமிறங்கிய டெல்லி அணி, பிளே-ஓஃப் சுற்றுக்குத் தகுதிபெறத் தவறியது.

இந்த ஏமாற்றகரமான செயல்திறன் காரணமாக, தற்போதைய தலைமைப் பயிற்றுவிப்பாளர் ஹேமங் பதானியின் பதவிக்கு ஆபத்து ஏற்பட்டுள்ள நிலையிலேயே, அணியை வலுப்படுத்த யுவராஜ் சிங் உள்வாங்கப்படுவதாக கூறப்படுகிறது.

Related Articles

Back to top button