News

தபால் சேவையை நவீனமயமாக்க ரூ.59 கோடி முதலீடு…!

இலங்கையின் தபால் போக்குவரத்து சேவையை வினைத்திறனாக்கும் நோக்கில், 59 கோடி ரூபாவுக்கும் அதிக செலவில் கொள்வனவு செய்யப்பட்ட புதிய வாகனங்களை விநியோகிக்கும் நடவடிக்கை நேற்று (12) உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது.

2025ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட ஒதுக்கீட்டின் கீழ், தபால் திணைக்களத்தின் சேவைகளை மேம்படுத்தும் நோக்கில் இந்த நவீனமயமாக்கல் திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

10 புதிய பாரவூர்திகள் (Lorries) மற்றும் 20 குரூ-கேப் (Crew Cabs) வாகனங்கள் நேற்று சேவையில் இணைக்கப்பட்டன.

மோட்டார் சைக்கிள்களில் பொதிகளைப் பாதுகாப்பாகக் கொண்டு செல்வதற்கான விசேட பெட்டிகள் (Bicycle Carriers) விநியோகிக்கப்பட்டன.

மத்திய தபால் பரிமாற்றகம் ஊடாக நாடளாவிய ரீதியில் COD (பணம் செலுத்திப் பொருட்களைப் பெறுதல்), SLP Courier உள்ளிட்ட அனைத்து தபால் பொருட்களையும் துரிதமாக விநியோகிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.

தபால் விநியோகத்தை வேகப்படுத்த, எதிர்காலத்தில் பாரம்பரிய துவிச்சக்கர வண்டிகளுக்குப் பதிலாக, பொதி வைக்கும் பெட்டிகளுடன் கூடிய மோட்டார் சைக்கிள்களை தபால்காரர்களுக்கு வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

கடந்த ஒரு வருட காலப்பகுதியில், தபால் திணைக்களம் பல புதிய ஆட்சேர்ப்புக்களைச் செய்துள்ளதோடு, புதிய அலுவலகங்களைத் திறத்தல் மற்றும் ஊழியர்களுக்கான பௌதீக வள மேம்பாட்டுத் திட்டங்களையும் முன்னெடுத்துள்ளது.

இந்த நிகழ்வில் சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ, பிரதி அமைச்சர் கலாநிதி கௌசல்யா ஆரியரத்ன, தபால் மா அதிபர் ருவன் சத்குமார உள்ளிட்ட முக்கிய அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

Related Articles

Back to top button