தங்கம் விலை மீண்டும் உயருமா? சந்தை நிபுணர்கள் வெளியிட்ட 2 முக்கிய காரணிகள்!

மத்திய கிழக்கில் போர்ச் சூழல் நீடித்து வரும் நிலையில், உலகச் சந்தையில் தங்கத்தின் அடுத்தகட்ட நகர்வு எவ்வாறு அமையும் என்பது குறித்து பொருளாதார நிபுணர்கள் சில முக்கிய கணிப்புகளை வெளியிட்டுள்ளனர்.
தற்போது தங்கம் விலை பெரிய மாற்றமின்றி நிலையாகக் காணப்பட்டாலும், எதிர்காலத்தில் அதன் விலையைத் தீர்மானிக்கப்போகும் இரண்டு பிரதான காரணிகள் குறித்து ஆய்வாளர் ‘மீட்வே’ (Midway) விளக்கியுள்ளார்:
- அமெரிக்க மத்திய வங்கியின் வட்டி விகிதக் கொள்கை
தங்கத்தின் விலையில் ஒரு பாரிய மாற்றம் ஏற்பட வேண்டுமானால், அமெரிக்க ஃபெடரல் ரிசர்வ் வங்கியிடமிருந்து (Federal Reserve) வட்டி விகிதக் குறைப்பு குறித்த தெளிவான அறிவிப்பு வெளியாக வேண்டும்.
குறிப்பாக, எதிர்வரும் மே மாதம் டொனால்ட் ட்ரம்பின் ஆதரவாளராகக் கருதப்படும் புதிய தலைவர் பதவியேற்க உள்ள நிலையில், அமெரிக்காவின் பணவீக்கக் கொள்கை மற்றும் வட்டி விகித முடிவுகள் தங்கத்தின் விலையில் அதிரடி மாற்றங்களை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
- போரின் கால அளவு மற்றும் பாதிப்பு
தற்போதைய நிலையில், ஈரான் மீதான போர் விரைவில் முடிவுக்கு வந்துவிடும் என்ற நம்பிக்கை உலகச் சந்தையில் நிலவுகிறது.
ஆனால், இந்தப் போர் நீண்ட காலத்திற்கு நீடிக்குமானால் அல்லது அதன் சேதங்கள் ஏனைய பகுதிகளுக்கும் பரவுமானால், முதலீட்டாளர்கள் மீண்டும் பாதுகாப்பான புகலிடமாக தங்கத்தையே நாடுவர்.
போர் நீடிக்கும் ஒவ்வொரு நாளும் தங்கத்தின் மீதான கவர்ச்சி மீண்டும் அதிகரிக்கும் என நிபுணர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
நிபுணர்களின் கருத்து:
இது குறித்துக் கருத்துத் தெரிவித்துள்ள சந்தை ஆய்வாளர் ‘கிறிஸ்டி’, தங்கம் ஏற்கனவே தனது உச்ச விலையைத் தொட்டுவிட்ட போதிலும், மேலதிக உயர்வைத் தடுக்கும் காரணிகளாக பண வீக்க கொள்கைகளும், வட்டி வீதங்களுமே அமைந்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.
இருப்பினும், மத்திய கிழக்கின் தற்போதைய நிச்சயமற்ற தன்மையால் எதிர்கால விலைக் கணிப்புகள் சவாலானதாகவே காணப்படுகின்றன.




