ஈரான் உடனான அமைதிப் பேச்சுவார்த்தை எதிர்பார்ப்பு: அமெரிக்க டொலர் மதிப்பு வீழ்ச்சி

அமெரிக்கா மற்றும் ஈரான் இடையிலான அமைதிப் பேச்சுவார்த்தை குறித்த எதிர்பார்ப்புகளால் டொலரின் மதிப்பு வீழ்ச்சியடைந்துள்ளது.
அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே அமைதி ஒப்பந்தம் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் தென்படுவதால், சர்வதேச சந்தையில் அமெரிக்க டொலரின் மதிப்பு தொடர்ந்து ஏழாவது நாளாக சரிவைக் கண்டுள்ளது.
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், ஈரான் உடனான போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான பேச்சுவார்த்தைகள் அடுத்த இரண்டு நாட்களில் பாகிஸ்தானில் மீண்டும் தொடங்கலாம் என்று தெரிவித்துள்ளார்.
கடந்த வார இறுதியில் நடைபெற்ற பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்ததைத் தொடர்ந்து, ஈரான் துறைமுகங்கள் மீது வொஷிங்டன் முற்றுகையை அறிவித்திருந்தது.இந்த நிலையில், ட்ரம்பின் தற்போதைய அறிவிப்பு முதலீட்டாளர்களிடையே நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.
அத்துடன், அமெரிக்க நிர்வாகம் இந்தப் போரிலிருந்து வெளியேறுவதற்கான வழிகளையே தேடுகிறது என்பது தெளிவாகத் தெரிகிறது என்று கோர்பே நிறுவனத்தின் தலைமை சந்தை உத்தி நிபுணர் கார்ல் ஷமோட்டா தெரிவித்துள்ளார்.
இதன் மூலம், அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே ஒரு குறியீட்டு அளவிலான ஒப்பந்தம் எட்டப்பட்டு, அதன் மூலம் தாக்குதல்கள் நிறுத்தப்படவும், முடக்கப்பட்ட கடல் வழிப்பாதைகள் மீண்டும் திறக்கப்படவும் வாய்ப்புள்ளதாக சந்தைத் தரப்பு எதிர்பார்க்கிறது.
இந்தநிலையி;ல் ஏனைய முக்கிய நாணயங்களுக்கு எதிரான டொலரின் மதிப்பு 0.26 சதவீதம் குறைந்து 98.08 ஆக உள்ளது.இது கடந்த மார்ச் 2-ஆம் திகதிக்குப் பிறகு பதிவான மிகக் குறைந்த அளவாகும்.
டொலருக்கு எதிரான யூரோவின் மதிப்பு 0.33 சதவீதம் உயர்ந்து 1.1796 டொலராக உள்ளது.
அமெரிக்காவின் பணவீக்கம் குறித்த சமீபத்திய புள்ளிவிவரங்கள் எதிர்பார்த்ததை விடக் குறைவாக வந்திருப்பதும் டொலர் மதிப்பு சரிவுக்கு மற்றொரு காரணமாகக் கூறப்படுகிறது.




