Uncategorized

பேராதனை பல்கலைக்கழக சூழலில் சிறுத்தைகளின் நடமாட்டம்: விழிப்புணர்வூட்ட நடவடிக்கை!

பேராதனைப் பல்கலைக்கழகம் மற்றும் ஹந்தானை மலைத்தொடரைச் சூழவுள்ள கிராமங்களில் அண்மைய நாட்களாக சிறுத்தைகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளமை தொடர்பில், வனஜீவராசிகள் பாதுகாப்புத் திணைக்களம் விழிப்புணர்வு வேலைத்திட்டங்களை ஆரம்பிக்கவுள்ளது.

இது குறித்து கருத்துத் தெரிவித்த வனஜீவராசிகள் பாதுகாப்புத் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் ரஞ்சன் மாரசிங்க, ஹந்தானை மலைப் பகுதிகளில் சிறுத்தைகளின் நடமாட்டம் என்பது ஒரு தொடர்ச்சியான விடயமாகும் எனக் குறிப்பிட்டார்.

வருடத்தின் குறிப்பிட்ட காலப்பகுதிகளில் சிறுத்தைகள் மனிதக் குடியிருப்புகளுக்குள் நுழைவதைத் தடுத்து நிறுத்துவது கடினமான ஒன்றாகும். எனவே, அச்சுறுத்தல்களைக் குறைப்பதற்காக கிராம மக்களுக்குத் தேவையான முன்னெச்சரிக்கை விழிப்புணர்வுகளை வழங்குவதில் திணைக்களம் கவனம் செலுத்தி வருகின்றது என அவர் மேலும் தெரிவித்தார்.

கடந்த வாரம் பல்கலைக்கழக வளாகத்தினுள் சிறுத்தைகள் நடமாடுவது உறுதிப்படுத்தப்பட்டதோடு, கால்நடை மருத்துவப் பண்ணையில் வளர்க்கப்பட்ட பசு மற்றும் நாய் என்பன சிறுத்தையினால் தாக்கப்பட்டு உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டன.

பல்கலைக்கழக வட்டாரங்கள் வழங்கிய தகவலின்படி, தற்போது புதிய அசம்பாவிதங்கள் எதுவும் பதிவாகவில்லை எனினும், பாதுகாப்பு எச்சரிக்கைகள் இன்னும் நீக்கப்படவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நிலைமையின் தீவிரத்தைக் கருத்திற் கொண்டு, பேராதனைப் பல்கலைக்கழக நிர்வாகம் மாணவர்கள் மற்றும் ஊழியர்களுக்குப் பாதுகாப்பு ஆலோசனைகளை வழங்கியுள்ளது.

அதிகாலை, மாலைப் பொழுது மற்றும் இரவு நேரங்களில் தனியாக நடப்பதைத் தவிர்க்க வேண்டும், வளாகத்திற்குள் நடமாடும் போது மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

சிறுத்தைகள் தென்பட்டால் உடனடியாக பல்கலைக்கழக பாதுகாப்புப் பிரிவினருக்கு அறிவிக்குமாறு கோரப்பட்டுள்ளது.

கால்நடைப் பண்ணை மற்றும் அதனைச் சூழவுள்ள பற்றைக்காடுகள் நிறைந்த பகுதிகளில் கூடுதல் அவதானத்துடன் இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

Related Articles

Back to top button