வடக்கு மாகாணத்தில் ஆசிரியர் இடமாற்றங்கள் குறித்து மேற்கொள்ளப்பட்டுள்ள தீர்மானம்!

வடக்கு மாகாணத்தில் ஆசிரியர் இடமாற்றங்களைத் தாமதமின்றி நடைமுறைப்படுத்துவதற்கும், இடமாற்றக் கொள்கையை வினைத்திறன் மிக்கதாக மாற்றியமைப்பதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தலைமையில், நேற்று நடைபெற்ற இலங்கை ஆசிரியர் சேவைச் சங்கம் மற்றும் இலங்கை அதிபர் சேவைச் சங்க பிரதிநிதிகளுடனான கலந்துரையாடலின் போதே இந்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளது.
இந்தநிலையில், ஆசிரியர் இடமாற்றச் சபையில் பதிவு செய்யப்பட்ட இயங்கு நிலையிலுள்ள தொழிற்சங்கங்களுக்கு மாத்திரமே அனுமதி வழங்கவேண்டும் என பிரதியமைச்சர் மஹிந்த ஜயசிங்க தெரிவித்துள்ளார்.
அத்துடன், அனுமதியற்ற தொழிற்சங்கப் பிரதிநிதிகள் இடமாற்றச் சபையில் இடம்பெற்றிருந்தால் அதனூடாக வழங்கப்படும் இடமாற்றம் சட்டரீதியாக சவாலுக்கு உட்படுத்தப்படும் அபாயம் உள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும், வடக்கு மாகாண கல்வித் திணைக்களம், அனைத்து வலயங்களுக்கும் அனுமதிக்கப்பட்ட தொழிற்சங்களின் விபரங்களை அனுப்பவேண்டும் எனவும் பிரதியமைச்சர் மஹிந்த ஜயசிங்க வலியுறுத்தியுள்ளார்.
இதனிடையே, தேசிய இடமாற்றக் கொள்கையுடன் வடக்கு மாகாண இடமாற்றக் கொள்கை சில இடங்களில் ஒத்து செல்லாத போதிலும், வடக்கு மாகாண இடமாற்றக் கொள்கை மேலும் வினைத்திறனாக மாற்றியமைக்கப்பட வேண்டும் என ஆசிரியர் சேவைச் சங்கத்தினர் கோரியுள்ளனர்.
அத்துடன், சேவையின் தேவை கருதிய இடமாற்றங்கள் வலயக்கல்விப் பணிப்பாளர்களால் வழங்கப்படும்போது, இந்த விடயம் தொடர்பில் 14 நாட்களுக்குள் இடமாற்றச் சபைக்கு அறிவிக்கவேண்டும் என்றும் அந்த சங்கத்தினர் குறிப்பிட்டுள்ளனர்.