Home இலங்கைச் செய்திகள்“எங்கள் உயிருக்கு ஒரு இலட்சம் ரூபாயா?” – 4,000 நாட்களைக் கடந்தும் தொடரும் வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் போராட்டம்.

“எங்கள் உயிருக்கு ஒரு இலட்சம் ரூபாயா?” – 4,000 நாட்களைக் கடந்தும் தொடரும் வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் போராட்டம்.

by Mohamed Siraj
0 comments

(செல்வி வினாயகமூர்த்தி)

வலிந்து காணாமலாக்கப்பட்ட தமது உறவுகளுக்கு நீதி கோரி முன்னெடுக்கப்படும் போராட்டம் 4,000 நாட்களைக் கடந்தும் தொடர்வதாகவும், தமது உறவுகளின் உயிரின் பெறுமதியை ஒரு இலட்சம் ரூபாய் இழப்பீட்டுடன் மதிப்பிட முடியாது எனவும் அம்பாறை மாவட்ட வலிந்து காணாமலாக்கப்பட்டோர் சங்கத்தின் தலைவி தம்பிராசா செல்வராணி தெரிவித்துள்ளார்.

சர்வதேச வலிந்து காணாமலாக்கப்பட்டோர் தினத்தை முன்னிட்டு எதிர்வரும் 30ஆம் திகதி யாழ்ப்பாணம் தந்தை செல்வா அரங்கில் நடைபெறவுள்ள சர்வதேச மாநாடு தொடர்பில் ஆலையடிவேம்பிலுள்ள தமிழரசுக் கட்சி அலுவலகத்தில் இன்று (26) புதன்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

banner

அவர் மேலும் தெரிவிக்கையில்,

எட்டு மாவட்டங்களையும் சேர்ந்த வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் உறவுகள் பங்கேற்கும் வகையில் இந்த மாநாடு நடைபெறவுள்ளது. அரசியல்வாதிகள், அரச சார்பற்ற நிறுவனங்களின் பிரதிநிதிகள், மதகுருமார்கள், பல்கலைக்கழக மாணவர்கள், ஊடகவியலாளர்கள், பொதுமக்கள் மற்றும் சர்வதேச நாடுகளின் தூதரகப் பிரதிநிதிகள் உள்ளிட்ட அனைவரும் இன, மத வேறுபாடுகளைக் கடந்து மாநாட்டிற்கும் போராட்டத்திற்கும் ஆதரவளிக்க வேண்டும்.

பல வருடங்களாக தமது உறவுகளைத் தேடி போராடி வருகின்றபோதிலும், இலங்கை அரசாங்கத்திடம் தமது உறவுகளுக்கு என்ன நடந்தது என்பதற்கான உண்மையையும் நீதியையும் கோரியபோதும் இதுவரை திருப்திகரமான பதில் கிடைக்கவில்லை. இதனால் தமது போராட்டத்தை சர்வதேசத்தை நோக்கி நகர்த்தி வருவதாகவும், சர்வதேச சமூகத்தின் தலையீட்டின் ஊடாகவே உண்மையையும் நீதியையும் பெற்றுக்கொள்ள முடியும் என நம்புவதாகவும் அவர் தெரிவித்தார்.

வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களுக்காக தங்களுடன் இணைந்து போராடிய 600க்கும் மேற்பட்ட தாய்மார்கள் இதுவரை உயிரிழந்துள்ளதாகவும், அவர்களை நினைவுகூரும் வகையில் மாநாட்டில் விசேட நூல்கள் வெளியிடப்பட்டு, உயிரிழந்த தாய்மார்களின் உறவினர்களிடம் அவை கையளித்து கௌரவிக்கப்படவுள்ளதாகவும் செல்வராணி தெரிவித்தார்.

மேலும், காணாமலாக்கப்பட்ட உறவுகள் விட்டுச் சென்ற நினைவுப் பொருட்கள் கண்காட்சியாக வைக்கப்படவுள்ளதுடன், காணாமலாக்கப்பட்டவர்களின் புகைப்படங்களைத் தாங்கிய ஊர்தியொன்றும் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்படவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

காணாமலாக்கப்பட்டோர் தொடர்பான அலுவலகமான OMP மீது தங்களுக்கு நம்பிக்கை இல்லை எனத் தெரிவித்த அவர் எட்டு மாவட்டங்களையும் சேர்ந்த வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் உறவுகள் சாட்சியங்களுடன் ஐந்து கோப்புகளை OMP-யிடம் கையளித்து சுமார் ஐந்து வருடங்கள் கடந்துள்ளபோதிலும், அவை தொடர்பில் இதுவரை உரிய பதில் வழங்கப்படவில்லை என்பதுடன்
குறித்த கோப்புகள் தொடர்பில் பின்னர் கேள்வி எழுப்பியபோது, அவை தொலைந்துவிட்டதாகவும், மீண்டும் வழங்கினால் விசாரணை நடத்துவதாகவும் தெரிவிக்கப்பட்டதாகவும் அவர் கூறினார்.

வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களை கண்டுபிடித்துவிட்டதாக பல்வேறு எண்ணிக்கைகளை வெளியிடும் OMP, தங்களது உறவுகள் தொடர்பில் உண்மையான விசாரணைகளை முன்னெடுக்கவில்லை எனவும்

வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு ஒரு இலட்சம் ரூபாய் இழப்பீடாக வழங்கப்படுவது தொடர்பிலும் அவர் கடும் விமர்சனத்தை முன்வைத்தார்.
வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கப்படும் இழப்பீட்டுத் தொகையைப் போன்று, வலிந்து காணாமலாக்கப்பட்ட தமது உறவுகளின் உயிருக்கும் ஒரு இலட்சம் ரூபாய் மதிப்பிடப்படுவதை ஏற்றுக்கொள்ள முடியாது என அவர் தெரிவித்தார்.

“எங்களது உறவுகளின் உயிரின் பெறுமதி ஒரு இலட்சம் ரூபாயா? அந்த ஒரு இலட்சம் ரூபாயைப் பெற்றுக்கொள்வதற்காக நாங்கள் போராடவில்லை. எங்களுக்கு நிதியைவிட தேவை நீதி மற்றும் உண்மை” என அவர் தெரிவித்தார்.

2017ஆம் ஆண்டு பெப்ரவரி 20ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்ட தங்களது தொடர் போராட்டம் தற்போது 4,000 நாட்களைக் கடந்துள்ளதாகவும், இவ்வளவு நீண்டகாலமாக தமது உறவுகளுக்கான நீதியை கோரி தாய்மார்கள் தொடர்ந்து போராடி வருவதாகவும்
தம்முடன் போராடிய பல தாய்மார்கள் உயிரிழந்துள்ளபோதிலும், தமது போராட்டம் தொடரும் என்பதுடன்
“நாங்கள் இறந்து போகலாம். எங்களுடன் இருந்து போராடும் தாய்மார்களும் இறந்து போகலாம். ஆனால் இந்தப் போராட்டம் உயிர்ப்புடன் இருக்கும். எதிர்கால சந்ததியினர் மீண்டும் இலங்கை அரசாங்கத்தால் பாதிக்கப்படக்கூடாது. எமது இளைஞர்கள், யுவதிகள் மீண்டும் வலிந்து காணாமலாக்கப்பட்டு, அவர்களைத் தேடி தாய்மார்கள் வீதிகளில் போராடும் நிலை ஏற்படக்கூடாது” என அவர் தெரிவித்தார்.

எதிர்வரும் 30ஆம் திகதி நடைபெறவுள்ள சர்வதேச மாநாட்டின் ஊடாக தங்களது கோரிக்கையை உலக நாடுகளுக்கு எடுத்துச் செல்ல எதிர்பார்ப்பதாகவும், சர்வதேச சமூகம் தலையிட்டு தங்களுக்கான நீதியைப் பெற்றுத்தர வேண்டும் எனவும் செல்வராணி கோரிக்கை விடுத்தார்.

இதே ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து தெரிவித்த தமிழரசுக் கட்சியின் அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடீஸ்வரன், வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களுக்கான உண்மையான நீதியைப் பெற்றுக்கொள்ள சர்வதேசப் பொறிமுறை அவசியம் என வலியுறுத்தினார்.

இறுதி யுத்தத்திலும் அதற்கு முன்னரும் பல்லாயிரம் உயிர்கள் இழக்கப்பட்டுள்ளதுடன், பெருமளவானவர்கள் இராணுவத்தினரிடமும் ஏனைய அரசாங்கத் தரப்பினரிடமும் கையளிக்கப்பட்டதாகவும், அவ்வாறு கையளிக்கப்பட்ட பலர் தொடர்பில் இதுவரை உரிய தகவல்கள் கிடைக்கவில்லை எனவும் அவர் தெரிவித்தார்.

வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் விவகாரத்தில் உண்மையைக் கண்டறிதல், நீதி விசாரணை, பொறுப்புக்கூறல், இழப்பீடு மற்றும் மீள்நிகழாமை ஆகியவை உறுதிப்படுத்தப்பட வேண்டும் என்பதுடன்
இந்த விடயங்களை நடைமுறைப்படுத்துமாறு பல்வேறு தரப்பினரால் அழுத்தங்கள் வழங்கப்பட்டபோதிலும், கடந்த அரசாங்கங்களும் தற்போதைய அரசாங்கமும் மெத்தனப் போக்கையும் நழுவல் போக்கையும் கடைப்பிடித்து வருவதாக அவர் குற்றஞ்சாட்டினார்.

இதன் காரணமாக உள்நாட்டுப் பொறிமுறையை நிராகரித்து, சர்வதேசப் பொறிமுறையை வலியுறுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

உள்நாட்டுப் பொறிமுறையின் ஊடாக சம்பவங்களுடன் தொடர்புடைய இராணுவத்தினர், அதிகாரிகள் மற்றும் முன்னாள் ஆயுதக் குழுக்களை பாதுகாக்கும் நிலை ஏற்படக்கூடும் எனவும், எனவே சர்வதேச நியமங்களுக்கு அமைவாக ஐக்கிய நாடுகள் சபையுடன் இணைந்து சர்வதேசப் பொறிமுறையொன்று உருவாக்கப்பட வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார்.

செம்மணி மனிதப் புதைகுழி உள்ளிட்ட சம்பவங்கள் தொடர்பில் முழுமையான விசாரணைகள் நடத்தப்பட வேண்டும் எனவும், குறிப்பாக காணாமலாக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு வழங்கப்படும் இழப்பீடு வெறுமனே ஒரு இலட்சம் அல்லது இரண்டு இலட்சம் ரூபாயாக மட்டுப்படுத்தப்படாமல், சர்வதேச நியமங்களுக்கு அமைவாக அவர்களின் வாழ்வாதாரத்தை மீளக் கட்டியெழுப்பக்கூடிய வகையில் அமைய வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.

மேலும், சம்பவங்களுக்கு பொறுப்பான அரச அதிகாரிகள், இராணுவத்தினர் உள்ளிட்ட தரப்பினருக்கு எதிராக சர்வதேச தரத்திலான விசாரணைகள் நடத்தப்பட்டு, குற்றம் நிரூபிக்கப்படும் பட்சத்தில் உரிய தண்டனை வழங்கப்பட வேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்தார்.

வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களுக்கான நீதியை வலியுறுத்தி எதிர்வரும் 30ஆம் திகதி யாழ்ப்பாணம் தந்தை செல்வா அரங்கில் நடைபெறவுள்ள மாநாட்டில் வடக்கு, கிழக்கு உள்ளிட்ட நாட்டின் அனைத்து பகுதிகளிலுமுள்ள மக்கள் கலந்துகொண்டு ஆதரவளிக்க வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடீஸ்வரன் அழைப்பு விடுத்தார்.

You may also like

Leave a Comment