Sri Lanka News

சுங்கத் திணைக்களம் முதல் 6 மாத வருவாய் இலக்கை கடந்தது

இலங்கை சுங்கத் திணைக்களம் இவ்வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் 1373.7 பில்லியன் ரூபா வருவாயை ஈட்டியுள்ளது.

வருடத்தின் முதல் 6 மாதங்களுக்காக (ஜூன் 30 ஆம் திகதியுடன் முடிவடைந்த காலப்பகுதி) நிர்ணயிக்கப்பட்டிருந்த வருமான இலக்கை விட இது கூடுதலானது என சுங்க ஊடகப் பேச்சாளரும், சிரேஷ்ட சுங்க பணிப்பாளருமான சந்தன புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார்.

முதல் 6 மாதங்களுக்கு சுங்கத் திணைக்களத்தின் எதிர்பார்க்கப்பட்ட வருமான இலக்கு 1,060.5 பில்லியன் ரூபாவாக இருந்த நிலையில், திணைக்களம் அந்த இலக்கைத் தாண்டி 313 பில்லியன் ரூபா மேலதிக வருவாயை ஈட்டியுள்ளது.

இவ்வருடத்திற்காக சுங்கத் திணைக்களத்திற்கு வழங்கப்பட்டுள்ள ஒட்டுமொத்த வருமான இலக்கு 2,206 பில்லியன் ரூபாவாகும்.

இந்நிலைமையின் கீழ், கடந்த வருடம் ஈட்டப்பட்ட சாதனை அளவிலான 2.5 ட்ரில்லியன் ரூபா ஒட்டுமொத்த வருமானத்தையும் இவ்வருடத்தில் தாண்டிச் செல்லக்கூடிய சாத்தியக்கூறுகள் உள்ளதாக ஊடகப் பேச்சாளர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

ஜூலை மாதத்திற்காக சுங்கத் திணைக்களத்திற்கு விதிக்கப்பட்டுள்ள வருமான இலக்கு 192.4 பில்லியன் ரூபாவாகும் என்பதுடன், அதன் முதல் இரண்டு நாட்களில் மாத்திரம் 31 பில்லியன் ரூபா வருவாயை சுங்கத் திணைக்களம் ஈட்டியுள்ளது.

எவ்வாறாயினும், மோட்டார் வாகன இறக்குமதி கட்டுப்பாடுகள் காரணமாக, அத்துறையிலிருந்து கிடைக்கும் வருமானத்தில் சற்றுக் குறைவு காணப்படுவதாக சந்தன புஞ்சிஹேவா மேலும் தெரிவித்துள்ளார்.

Related Articles

Back to top button