எச்சரிக்கை! நாடளாவிய ரீதியில் தீவிரமடையும் டெங்கு: இன்று முதல் 3 நாள் விசேட ஒழிப்பு நடவடிக்கை!

நாடளாவிய ரீதியில் டெங்கு நோயின் தாக்கம் அதிகரித்துள்ள நிலையில், அதிக ஆபத்துள்ளதாகக் கண்டறியப்பட்ட 538 கிராம சேவகர் பிரிவுகளில், டெங்குவைக் கட்டுப்படுத்துவதற்கான மூன்று நாள் விசேட நடவடிக்கை இன்று முதல் ஆரம்பிக்கப்படவுள்ளது.
14 மாவட்டங்களைச் சேர்ந்த 104 சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகளை உள்ளடக்கியே இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.
குறிப்பாக, கொழும்பு மாவட்டத்தில் பத்தரமுல்ல, பொரலஸ்கமுவ, மஹரகம, தெஹிவளை, கொத்தட்டுவ, கொலன்னாவ மற்றும் மொரட்டுவை உள்ளிட்ட 24 சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவுகளும், கம்பஹா மாவட்டத்தில் அத்தனகல்ல, சீதுவை, களனி மற்றும் நீர்கொழும்பு உள்ளிட்ட 15 சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவுகளும் அதிக ஆபத்துள்ள பகுதிகளாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளன.
தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவின் தரவுகளுக்கமைய, தற்போது நாடு முழுவதும் பதிவாகியுள்ள டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 47,530 ஆக அதிகரித்துள்ளதுடன், நேற்று வரை 29 உயிரிழப்புகள் பதிவாகியுள்ளன.
அத்துடன், மேல் மாகாணத்தில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை ஐந்து மடங்காக அதிகரித்துள்ளதால், மாகாணத்திலுள்ள டெங்கு செயலணியை மீண்டும் செயற்படுத்துமாறு அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் ஊடகப் பேச்சாளர் சமில் விஜேசிங்க கோரிக்கை விடுத்துள்ளார்.
இதற்கிடையில், டெங்கு ஒழிப்பு மற்றும் கட்டுப்பாடு தொடர்பான தகவல்களைப் பெற்றுக்கொள்வதற்காக விசேட டெங்கு கட்டுப்பாட்டு அறை ஒன்று ஸ்தாபிக்கப்பட்டுள்ளது.
டெங்கு கட்டுப்பாட்டு அறைகளில், திங்கள் முதல் வெள்ளி வரை காலை 8.00 மணி முதல் இரவு 8.00 மணி வரையிலும், சனிக்கிழமைகளில் காலை 8.00 மணி முதல் நண்பகல் 12.00 மணி வரையிலும் பொதுமக்களுக்குத் தகவல்களைப் பெற்றுக்கொள்ள முடியும்.




