14 வயது மாணவன் சாதாரண தர (O/L) பரீட்சைக்குத் தோற்றி 8 “A ஒரு “B” சித்தியையும் பெற்று வரலாற்றுச் சாதனை படைத்துள்ளார்.

இலங்கையின் கல்வித்துறையில் வழமையான கல்வி முறைகளை முறியடித்து, 9ஆம் தரத்தில் கல்வி கற்கும் 14 வயது மாணவன் ஒருவன் இம்முறை கல்விப் பொதுத்தராதர சாதாரண தர (O/L) பரீட்சைக்குத் தோற்றி 8 “A” சித்திகளையும், ஒரு “B” சித்தியையும் பெற்று வரலாற்றுச் சாதனை படைத்துள்ளார்.
காலி லபுதுவ சிறிதம்ம வித்தியாலயத்தில் கல்வி பயிலும் அய்யாஷ் அஹமட் என்ற மாணவனே காலியிலிருந்து பதிவாகியுள்ள இந்த அரிய சாதனைக்குச் சொந்தக்காரராவார்.
இலங்கையின் கல்வி முறைமையின்படி 11ஆம் தரத்தில் கல்வி பயிலும் 16 வயது மாணவர்களே O/L பரீட்சைக்குத் தோற்றுவது வழமையாகும். எனினும், தனது பலத்த மன உறுதியின் காரணமாக 8ஆம் தரத்தில் கல்வி கற்கும் போதே, 10 மற்றும் 11ஆம் தரங்களுக்குரிய முழுப் பாடத்திட்டங்களையும் ஒரே வருடத்திற்குள் சுயமாகவே படித்து முடித்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து, இம்முறை நடைபெற்ற சாதாரண தரப் பரீட்சையில் “தனிப்பட்ட விண்ணப்பதாரராக” (Private Candidate) தோற்றி இந்த அசாத்தியமான பெறுபேறுகளை அய்யாஷ் அஹமட் பெற்றுள்ளார்.
எதிர்காலத்தில் ஒரு சிறந்த விமானப் பொறியாளராகி (Aircraft Engineer) நாட்டுக்குச் சேவை செய்ய வேண்டும் என்பதே தனது ஒரே எதிர்பார்ப்பு என இந்த இளம் சாதனையாளர் தெரிவித்துள்ளார்.




