இங்கிலாந்தில் விளாசி அசத்திய குமார் சங்கக்கார

இங்கிலாந்தின் உள்ளூர் கிராமிய கிரிக்கெட் போட்டியில் (UK Village Cricket) கடந்த வாரம் 168 ஓட்டங்களை விளாசி அசத்திய இலங்கை அணியின் முன்னாள் உலகப் புகழ்பெற்ற அணித்தலைவர் குமார் சங்கக்கார, தனது அண்மைய போட்டியில் 9 பந்துகளை எதிர்கொண்டு ஓட்டங்கள் எதுவும் பெறாமல் (Duck) ஆட்டமிழந்து கிரிக்கெட் விளையாட்டின் நிச்சயமற்ற தன்மையை மீண்டும் ஒருமுறை நிரூபித்துள்ளார்.
ஷில்லிங்ஸ்டோன் சிசி (Shillingstone CC) அணிக்காக விளையாடி வரும் அவர், இம்முறை துடுப்பாட்டத்தில் ஏமாற்றம் அளித்த போதிலும் பந்துவீச்சில் அணியின் வெற்றிக்கு மிக முக்கிய பங்களிப்பை வழங்கியுள்ளார்.
தனது துல்லியமான பந்துவீச்சு மூலம் 9 ஓவர்கள் பந்து வீசி, வெறும் 25 ஓட்டங்களை மாத்திரமே விட்டுக்கொடுத்து 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அணியை வெற்றிப் பாதைக்கு இட்டுச் சென்றுள்ளார்.
ஒரு வாரம் சாதனைச் சதம், அடுத்த வாரம் பூச்சியத்திற்கு ஆட்டமிழப்பு என கிரிக்கெட் விளையாட்டு எவ்வளவு சுவாரஸ்யமானது என்பதற்கும், துடுப்பாட்டத்தில் சோம்பினாலும் பந்துவீச்சால் அணிக்கு எவ்வாறு பங்களிக்க முடியும் என்பதற்கும் சங்கக்காரவின் இந்த ஆட்டம் ஒரு சிறந்த எடுத்துக்காட்டாக அமைந்துள்ளது.




