Sports

நியூசிலாந்தை வீழ்த்தி இலங்கை மகளிர் அணி மாபெரும் வெற்றி!

மகளிர் இருபதுக்கு -20 உலகக் கிண்ணக் கிரிக்கெட் தொடரின் விறுவிறுப்பான 7ஆவது லீக் போட்டியில், நியூசிலாந்து மகளிர் அணியை 5 விக்கெட்டுகளால் வீழ்த்தி இலங்கை மகளிர் அணி வரலாற்று வெற்றியைப் பதிவு செய்துள்ளது.

சவுதாம்ப்டனில் உள்ள ‘தி ரோஸ் போல்’ மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில், நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற நியூசிலாந்து அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.

முதலில் துடுப்பெடுத்தாடிய நியூசிலாந்து மகளிர் அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 6 விக்கெட்டுகளை இழந்து 150 ஓட்டங்களைப் பெற்றது.

நியூசிலாந்து அணியின் சார்பாக அதிரடியாக விளையாடிய அணித்தலைவர் மெலி கெர் 45 ஓட்டங்களையும், சோஃபி டிவைன் 45 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.

இலங்கை அணி சார்பில் பந்துவீச்சில் அசத்திய கவிஷா தில்ஹாரி 2 விக்கெட்டுகளையும், மிதாலி அயோத்யா, சுகந்திகா குமாரி, சமரி அத்தபத்து மற்றும் நிமேஷா மீபாகே ஆகியோர் தலா ஒரு விக்கெட்டினையும் வீழ்த்தினர்.

அதன்படி, 151 ஓட்டங்கள் என்ற கடினமான வெற்றி இலக்கை நோக்கி களமிறங்கிய இலங்கை அணிக்கு ஆரம்பத்தில் அடுத்தடுத்து விக்கெட்டுகள் சரிந்தன.

அணித்தலைவர் சமரி அத்தபத்து 27 ஓட்டங்களுடனும், விஷ்மி குணரத்ன 17 ஓட்டங்களுடனும் ஆட்டமிழந்தனர். ஒரு கட்டத்தில் 55 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து இலங்கை அணி தடுமாறியது.

5ஆவது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த நிலக்ஷிகா சில்வா மற்றும் கவிஷா தில்ஹாரி ஆகியோரின் ஜோடி 50 ஓட்டங்களை பகிர்ந்து அணியை மீட்டெடுத்தது. கவிஷா தில்ஹாரி 17 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார்.

இருப்பினும், இறுதிவரை ஆட்டமிழக்காமல் தூணாக நின்ற நிலக்ஷிகா சில்வா அதிரடியாக 37 பந்துகளில் 54 ஓட்டங்களை (5 பவுண்டரிகள், 1 சிக்ஸர்) விளாசினார். இவருக்கு பலத்த ஆதரவளித்த விக்கெட் காப்பாளர் கௌஷினி நுத்யங்கனா 14 பந்துகளில் 3 பவுண்டரிகள் அடங்கலாக 24 ஓட்டங்களை ஆட்டமிழக்காமல் பெற்றார்.

இறுதியில் இலங்கை மகளிர் அணி 19.4 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை மாத்திரம் இழந்து 153 ஓட்டங்களைப் பெற்று, 5 விக்கெட்டுகளால் மாபெரும் வெற்றியைப் பதிவு செய்தது.

நியூசிலாந்து அணி சார்பாக பந்துவீச்சில் நென்சி படேல் 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related Articles

Back to top button