Sri Lanka News

இலங்கையில் டீசல் விலை 600 ரூபாயாக உயருமா? விடுக்கப்பட்ட எச்சரிக்கை

ஒரு லீற்றர் டீசலின் விலையை 600 ரூபாவாக உயர்த்த வேண்டிய அவசியம் எழுந்துள்ளது என பொருளாதார நிபுணர் தனனாத் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

உலக சந்தையில் தற்பொழுது நிலவி வரும் விலைகளின் அடிப்படையில் ஒரு லீற்றர் டீசலின் விலையை 600 ரூபாவாக உயர்த்த வேண்டிய அவசியம் எழுந்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

தற்பொழுது நாட்டில் ஒரு லீற்றர் டீசலின் விலை 382 ரூபாவாக காணப்படுகின்ற நிலையில் உலக சந்தை விலைகளின் பிரகாரம் இந்த தொகையில் டீசல் விற்பனை செய்ய முடியாது என தெரிவித்துள்ளார்.

தற்போதைய நிலைமைகளின் அடிப்படையில் டீசலின் விலை உடன் உயர்த்தப்பட வேண்டியுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

சித்திரை புத்தாண்டு காலம் என்பதனால் விலை அதிகரிப்பு மேற்கொள்ளப்படாதிருக்கக் கூடும் எனவும் புத்தாண்டின் பின்னர் விலை உயர்த்தப்படலாம் எனவும் தெரிவித்துள்ளார்.

விலை அதிகரிப்பு மேற்கொள்ளப்படாவிட்டால் அரசாங்கம் மானியங்களை வழங்க நேரிடும் எனவும் இவ்வாறு மானியங்கள் வழங்கப்பட்டால் அந்நிய செலாவணி கையிருப்பு போன்றே ரூபாவின் பெறுமதியும் வீழ்ச்சியடையும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

டீசல் விலை அதிகரித்தால் மக்கள் பல்வேறு நெருக்கடிகளை எதிர்நோக்க நேரிடும் என்ற போதிலும் வேறு மாற்று வழியில்லை என அவர் தெரிவித்துள்ளார்.

நிவாரணங்களை வழங்குவதன் மூலம் நாட்டின் பொருளாதாரத்திற்கு ஏற்படக்கூடிய பாதிப்பு விலை அதிகரிப்பு மூலம் ஏற்படக் கூடிய தாக்கத்தை விடவும் வலுவானது என தனானாத் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

Related Articles

Back to top button