பொத்துவில் சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயத்திற்கு புதிய குடிநீர்த்தொகுதி கையளிப்பு!

பொத்துவில் சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயத்தின் குடிநீர் வசதிகளை மேம்படுத்தும் நோக்கில், தன்னார்வ நிறுவனமொன்றின் நிதியுதவியுடன் அமைக்கப்பட்ட புதிய குடிநீர்த்தொகுதி அண்மையில் மக்கள் பாவனைக்காக உத்தியோகபூர்வமாகக் கையளிக்கப்பட்டது.
Sewds Sri Lanka அமைப்பின் ஒருங்கிணைப்பில் இத்திட்டம் வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டு நிறைவு செய்யப்பட்டுள்ளது.
சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயத்திற்கு வருகை தரும் பொதுமக்கள் மற்றும் ஊழியர்களின் நீண்டகால குடிநீர்த் தேவையைப் பூர்த்தி செய்யும் நோக்கில் இந்தத் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டது.
இதனை மக்கள் பாவனைக்கு கையளிக்கும் உத்தியோகபூர்வ நிகழ்வு, பொத்துவில் சுகாதார வைத்திய அதிகாரி டொக்டர் உவைஸ் பாறூக் தலைமையில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் Sewds Sri Lanka அமைப்பின் முக்கியஸ்தர்கள், சுகாதார வைத்திய அதிகாரி காரியாலய உத்தியோகத்தர்கள், ஊழியர்கள் எனப் பலர் கலந்துகொண்டனர்.
பொத்துவில் பிரதேச பொதுமக்களின் அத்தியாவசியத் தேவைகளை உடனுக்குடன் இனங்கண்டு, இவ்வாறான மக்கள் நலத்திட்டங்களை அர்ப்பணிப்புடன் முன்னெடுத்து வரும் சுகாதார வைத்திய அதிகாரிக்கும், அதற்கு ஒத்துழைப்பு வழங்கிய Sewds Sri Lanka அமைப்பிற்கும் பிரதேச மக்கள் தங்களது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துள்ளனர்.




