India News

மீண்டும் என்டிஏ ஆட்சி அமைய தமிழகத்தின் பங்கு முக்கியம்: நிர்வாகிகளுக்கு மோடி வலியுறுத்தல்

மத்தியில் மீண்டும் என்டிஏ ஆட்சி அமைய தமிழகத்தின் பங்கு முக்கியம்” என பாஜக நிர்வாகிகளுக்கு பிரதமர் மோடி வலியுறுத்தினார்.

இரண்டு நாள் பயணமாகத் தமிழகம் வந்த பிரதமர் நரேந்திர மோடி, புதுச்சேரி பொதுக்கூட்டத்தை முடித்துவிட்டு நேற்று முன் தினம் இரவு சென்னை திரும்பினார். கிண்டியில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் தங்கிய அவர், நேற்று காலை பாஜக மையக்குழு கூட்டத்தை கூட்டினார். மத்திய அமைச்சர் பியூஷ் கோயல், நயினார் நாகேந்திரன், எல்.முருகன், அண்ணாமலை, தமிழிசை சவுந்தரராஜன் உள்ளிட்ட 18 முக்கிய நிர்வாகிகள் இந்தக் கூட்டத்தில் பங்கேற்றனர்.

இந்தக் கூட்டத்தில், பாஜக போட்டியிடும் 27 தொகுதிகளின் வெற்றி வாய்ப்புகள் மற்றும் கடந்த முறையை விட அதிக இடங்களில் வெல்வதற்கான வியூகங்கள் குறித்தும் விவாதிக்கப்பட்டது. மேலும், தேர்தல் பிரச்சாரம், பொதுக்கூட்டங்கள், முக்கிய தலைவர்களின் பிரச்சாரப் பயணம் உள்ளிட்ட பணிகள் தொடர்பாகவும் ஆலோசிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

அதேசமயம் “கட்சிக்குள் இருக்கும் கருத்து வேற்றுமைகளை அடியோடு மறந்துவிட்டு, வேட்பாளர்களின் வெற்றிக்காக அனைவரும் ஒற்றுமையுடன் பாடுபட வேண்டும். மத்தியில் மீண்டும் என்டிஏ ஆட்சி அமைய தமிழகத்தின் பங்கு முக்கியம்” என நிர்வாகிகளிடம் பிரதமர் மோடி திட்டவட்டமாகப் பேசியதாகக் கூறப்படுகிறது.

மேலும், வரும் 15-ம் தேதி கன்னியாகுமரியில் மோடி மேற்கொள்ள இருக்கும் தேர்தல் பிரச்சாரம் குறித்தும், அடுத்தடுத்து தமிழகத்தில் பாஜக தேசிய தலைவர்கள் மேற்கொள்ள இருக்கும் பிரச்சாரங்கள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.

ஹெச். ராஜாவுக்கு ஆளுநர் பதவி: தேர்தல் நெருங்கிவிட்ட சூழலில், தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளைத் தள்ளி வைத்துவிட்டு, இலக்கை நோக்கிப் பயணிக்க வேண்டியதன் அவசியத்தை பிரதமர் வலியுறுத்தினார். மேலும், பாஜகவின் மூத்த தலைவர் ஹெச். ராஜாவுக்கு விரைவில் ஆளுநர் பதவி வழங்கத் திட்டமிடப்பட்டுள்ளதாகப் பிரதமர் மோடி குறிப்பிட்டதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இது கட்சி வட்டாரத்தில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

மொடக்குறிச்சி தொகுதியில் தற்போதைய சட்டப்பேரவை உறுப்பினர் சரஸ்வதிக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை என்றாலும், அவரது மருமகள் கிருத்திகா சிவக்குமாருக்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டிருப்பதை பிரதமர் வரவேற்றுள்ளார். நேற்றைய ஆலோசனைக்குப் பிறகு, மதியம் 1.20 மணியளவில் தனி விமானம் மூலம் பிரதமர் மோடி கொச்சிக்குப் புறப்பட்டுச் சென்றார்.

Related Articles

Back to top button