Sri Lanka News

கிரிக்கெட் விளையாட்டுத் தொடர்பாக விளையாட்டுத்துறை அமைச்சரின் விசேட அறிவிப்பு

இலங்கை கிரிக்கெட் விளையாட்டைக் கட்டியெழுப்புவதற்காக, கிரிக்கெட் நிர்வாகத்தை இடைக்காலக் குழுவொன்றிடம் ஒப்படைப்பது குறித்து சர்வதேச கிரிக்கெட் பேரவையுடன் (ICC) கலந்துரையாடல்கள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக இளைஞர் விவகார மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் சுனில் குமார கமகே தெரிவித்தார்.

இன்றுஅமைச்சில் நடைபெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.

கிரிக்கெட் விளையாட்டை மேம்படுத்துவதற்காக ஜனாதிபதியும் இதில் தலையிட்டுள்ளதாக அமைச்சர் மேலும் குறிப்பிட்டார்.

இதற்கமைய, தற்போது சர்வதேச கிரிக்கெட் பேரவையுடன் இது தொடர்பான கலந்துரையாடல்கள் நடைபெற்று வருவதாகவும், அந்த பேச்சுவார்த்தைகளில் ஜனாதிபதியும் கலந்துகொள்வதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

சர்வதேச கிரிக்கெட் பேரவையின் இணக்கப்பாட்டுடன் அடுத்தகட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும், இலங்கைக்கு கிரிக்கெட் தடையைப் பெற்றுக்கொண்டு விளையாட்டை மேம்படுத்த முடியாது என்பதால், விளையாட்டைப் பாதுகாத்துக்கொண்டு கிரிக்கெட்டை அபிவிருத்தி செய்வது குறித்து அவதானம் செலுத்தப்படும் என்றும் அமைச்சர் மேலும் கூறினார்.

கிரிக்கெட் விளையாட்டை மேம்படுத்துவதற்கான திட்டங்கள் ஏற்கனவே தயாரிக்கப்பட்டுள்ளதாகவும், அதற்கான சில நடவடிக்கைகள் ஏற்கனவே எடுக்கப்பட்டுள்ளதாகவும், எதிர்காலத் திட்டங்கள் விரைவில் நடைமுறைப்படுத்தப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

கிரிக்கெட் விளையாட்டைக் கட்டியெழுப்பும் பொறுப்பை அரசாங்கம் என்ற ரீதியில் ஏற்றுக்கொண்டுள்ளதாகவும், அதனை எவர் மீதும் சுமத்திவிட்டு ஒதுங்கிவிட முடியாது என்றும் அமைச்சர் கூறினார்.

இந்தத் தருணத்தில் வீரர்கள் அவமதிக்கும் வகையிலோ அல்லது அவர்களுக்குக் கௌரவக் குறைவு ஏற்படும் வகையிலோ கருத்துக்களை வெளியிடுவதைத் தவிர்க்குமாறு பொதுமக்களிடம் அமைச்சர் தயவுடன் கேட்டுக்கொண்டார்.

Related Articles

Back to top button